சனி, 24 டிசம்பர், 2011

வியளம் கேட்டீர்களா? 64

மகாபாரதத்திலே தருமன் முதலான பஞ்சபாண்டவர்களைப் போரிலே தோற்கடிக்க முடியாது என்ற உண்மை கௌரவர்களின் மாமனாரான சகுனிக்குத் தெரிந்தது.தந்திரத்தால் அவர்களை விழுத்தி, அதன் மூலம் அரசியல் இலாபம் தேடும் முடிவைச் சகுனி எடுக்கிறான்.அந்தச் சதி வலையில் நேர்மையும்,நற்குணங்களும் நிரம்பிய தருமன் வீழ்கிறான்.சூதாட்டம் ஆரம்பமாகிறது.தருமன் நகர்,நாடு,சகோதரர்கள்,மனைவி,தான் என எல்லாவற்றையும் சூதுப் பொருளாய் வைத்துத் தோற்றுப் போகிறான்.முடிவில் இராச்சியம் அனைத்தையும் இழந்து, தன்னை நம்பிய அனைவரையும் வஞ்சித்துக் காடேக நேர்கிறது.
காலங் காலமாக அரசியல் தலைமை வகிப்பவர்கள் அரசியல் சூதாட்டங்களில் ஈடுபட்டுத் தோற்றுப் போய், தம்மை அரியாசனம் ஏற்றிய மக்களை வஞ்சித்த வரலாறு நடந்தே வந்துள்ளது. தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெற்றுத் தருவார்கள் என நம்பி ஒவ்வொரு தடவையும் தமது மக்கள் பிரதிநிதிகளை அரியாசனம் ஏற்றி வந்துள்ளனர்.அவ்வாறு அரியாசனம் ஏறியவர்களில் சிலர் தாம் மேடைகளில் முழங்கியவற்றை அப்படியே மூட்டை கட்டி வைத்து விட்டு,தமது நலன்களை மேம்படுத்தும் வகையில் ஒத்தூதிகளாக மாறிய அவலமும் நம்மிடமுண்டு.
 சாதாரண பொதுமக்கள் அரசாங்கத்தைப் போற்றித் துதி பாடினால் அல்லது அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட்டால் நமது அரசியல்வாதிகள் அவர்களைப் பார்த்து துரோகிகள், புல்லுருவிகள் என்று அழைப்பர்.அதையே அவர்கள் செய்யும் போது அதற்கு என்ன பெயர் வைப்பது? குத்துப்பட்டுக் கொண்டு கூடிக்குலாவும் விந்தை ஒன்றில் ஏழைக்குடிகாரன் வீட்டில் நடக்கும். இல்லையேல் அரசியல்வாதிகளிடத்தில் இருக்கும்.குடிகாரன் குடும்பங்களில் மாலையில் சண்டை ஆரம்பிக்கும்.கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் சகிக்க முடியாத வார்த்தைகளால் திட்டுவர்.பானை சட்டி உடையும்.அடிபிடி நிகழும்.காலையில் பார்க்கும் போது நீங்கள் ஆச்சரியப் படும் வகையில் அவர்கள் அந்நியோன்னியமாகக் கதைத்துப் பேசுவர்.பின்னர் மாலையில் மீண்டும் தர்பார் ஆரம்பித்து இரவில் நிறைவுறும்.
அதுபோலத்தான் அரசியல்வாதிகளின் தர்பாரும்.பாராளுமன்றத்தில் எத்தகைய அநாகரீகமாக நடந்து கொள்ள முடியுமோ அத்தகையதாக நடந்து கொள்வர்.ஹன்சார்ட்டில் பதிய முடியாத வார்த்தைகள் எல்லாம் தாராளமாகப் பிரயோகிக்கப்படும்.அமைச்சர் ஒருவர் எதிர்க்கட்சிப் பெண் பாராளுமன்ற உறுப்பினர் பேசும் போது கிண்டலடித்து, பறக்கும் முத்தம் தருவார்.இந்தக் கண்றாவிக் காட்சிகளைக் கலரியில் அமர்ந்து நமது எதிர்கால மன்னர்கள் சங்கோஜத்துடன் பார்த்துக் கொண்டிருப்பர்.
ஆனால் இவையெல்லாம் பின்னர் சிற்றுண்டிச்சாலையிலேயே மறக்கப்பட்டு விடும். விருந்துபசாரங்களில் அந்நியோன்னியம் களை கட்டும்.எதிரிகளாக முட்டி மோதியோர் கைகுலுக்கி, அன்புப் பானம் பருகுவர்.எனவே குத்துப்பட்டுக் கூடிக்குலாவும் இடமே பாராளுமன்றமாகும். அரசியல் சூதாட்டங்கள் நிகழும் இடமும் இதுவேயாகும்.
சூது பண்டைக்கால விளையாட்டாகும். எனவே,இப்போது அந்த இடத்தை துடுப்பாட்டம் ஆக்கிரமித்துள்ளது. நமது தமிழ்த் தலைவர்கள் தமிழர்களது வலிமையை,கொள்கைப் பிடிப்பை சர்வதேசத்திடம் முரசறைந்து காட்டுவதற்கு துடுப்பாட்டம் வழி செய்யும் எனப் பிரச்சாரம் செய்து கொண்டாவது இந்தத் துடுப்பாட்டத்தில் பங்கு கொள்வது அவசியமாகும்.
ஏனெனில் தமிழர்களாகிய நாங்கள் உங்களைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தோம். எங்கள் சார்பில் குரல் கொடுக்க வைத்தோம்.அரசுடன் பேச வைத்தோம்.பேசிப் பயனில்லை என்று சொல்லிக் கொண்டு நீங்கள் பேசுகிறீர்கள்.பேசுங்கள்.அரசாங்கம் சர்வதேசத்துக்குச் சொல்லக் கால அவகாசம் தேவையல்லவா? பேச்சுவார்த்தை செய்து சலிப்படைந்த உங்கள் மனதுக்குத் தெம்பு வர அரசாங்கத்துடன் சேர்ந்து எதிர்க் கன்னையில் நின்றாவது விளையாடுங்கள். தருமனுக்கு ஒரு கிருஷ்ணன் உதவ முன்வந்தது போல உங்களுக்கும் யாராவது வருவார்தானே?
விழிச்சான்குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 63

ஒரு சிறுவன் வாழ வேண்டிய வயதில் இறந்து போனான். அந்தச்சிறுவனை எழுப்பித் தருமாறு அவனது உறவுகள் புத்த பகவானிடம் வேண்டுகின்றனர். அதற்கு அவர் சாவைச் சந்திக்காத ஒரு வீட்டிலிருந்து மிளகைப் பெற்று வந்தால் அவனை எழுப்பித் தருகிறேன் என்று கூறினார்.சாவைச் சந்திக்காத வீடு எங்கேனும் இருக்குமா? எனவே பிள்ளையை எழுப்ப முடியாது என்பது புத்த பகவானின் தீர்ப்பாகும்.
மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ஆந் திகதி காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத் தரக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.சர்வதேசமெங்கும் பிணக்குகள் வன்முறைகளாகக் கட்டவிழும் போது சாதாரண மக்கள் காணாமல் போவது காலங்காலமாக நடைபெறுகின்றது. எனினும் நாடுகளுக்கிடையிலான யுத்தங்களில் காணாமல் போனோரை விட சொந்த அரசுகளாலும், அரசுக்கெதிரான வன்முறைப் போராட்டங்களை முன்னெடுத்த அமைப்புக்களாலும் சொந்த மக்கள் காணாமல் செய்யப்பட்ட வரலாறே உலகமெங்கும் அதிகமாக விரவிக் கிடக்கிறது. தமிழர் பிரதேசங்களில் ஒவ்வொரு தமிழனதும் உறவுகள் யாரேனும் ஒருவராவது யுத்தத்தில் காவு கொள்ளப்பட்டோ, காணாமல் போயோ இருப்பர்.
இலங்கையில் 1958ஆம் ஆண்டு இடம்பெற்ற குறிப்பிடத்தக்க முதலாவது இனக்கலவரத்துடன் காணாமல் போதலும் ஆரம்பமாகியது எனலாம்.1977,1983 என நடைபெற்ற கலவரங்களில் பல தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு இன்றளவும் விடையில்லை.பின்னர் அரச படைகளால் கைது செய்யப்பட்டு காணாமல் போனோர் இன்றளவும் பல ஆயிரங்களாகும். அதைவிட இயக்கங்களின் உள்வீட்டுக் கலகங்களாலும்,சக இயக்கங்களுக்கிடையிலான பகையினாலும் கொல்லப்பட்டவர் போக, இருக்கின்றனர் என்ற நப்பாசையுடன் பார்த்திருக்க இன்றளவும் வராதவர்களின் எண்ணிக்கையும் பெரியது.முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி யுத்தத்தைத் தொடர்ந்து மனைவி,பிள்ளைகள் முன்னிலையில் சரணடைந்த போராளிகளும்  காணாமல் போனவர்களின் பட்டியலுக்குள்ளேயே அடங்கியுள்ளனர்.இது தவிர வெளிநாடு களுக்கெனப் புறப்பட்டு சிறிய கப்பல்களில் பயணம் செய்து காணாமல் போனவர்களும் சில நூற்றுக்கணக்கானவராகும்.
இலங்கை காணாமல் போனவர்களின் பிரதான நாடாக அடையாளப்படுத்தப்படுகிறது.இராமனையும் இலக்குவனையும் வனவாசத்துக்கு அனுப்பி விட்டு அவர்களது வரவை எதிர்பார்த்து உருக்குலைந்த இதயத்தோடு காத்திருந்த கைகேயியைப் போல, எத்தனையோ தாய்மாரும், அரிச்சந்திரனைப் பிரிந்த சந்திரமதி போல எத்தனையோ மனைவியரும் இன்றளவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.பலருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. பலர் பிரிவாற்றாது தசரத மாமன்னன் போல உயிர் நீங்கி மண்ணோடு மண்ணாகி விட்டனர்.பூவிழந்து, பொட்டிழந்து வாழ வழியற்று எத்தனையோ அபலைப் பெண்கள் சமூக வரன்முறைகளோடு போராடி மாய்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால் காணாமல் போதலுக்கு முற்றுப்புள்ளி இடுவார் யாருமில்லை.அது முடிவுறாத் தொடர்கதையாக நீள்கிறது.காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்ந்து, அவர்கள் கொல்லப்பட்டவர்களாயின் அதை உறுதிப்படுத்தினாலாவது அவர்களது குடும்பத்தாரின் மனதுக்கு ஆறுதல் கிடைக்கும்.சாத்திரிமார்களுக்கும், குறி சொல்வோருக்கும், காணாமல் போனவர்களை மீட்டுத் தருவதாகக் கூறிப் பிழைப்பு நடத்துவோருக்கும் கொடுக்கும் பணமாவது மிஞ்சும்.
காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத் தருமாறு புத்த பகவானை வேண்டுவோமானால் அவர் எவ்வாறு பதிலளிப்பாரோ தெரியாது.ஆனால் புத்த தர்மத்தைப் பேணும் ஆட்சிபீடத்தில் இருந்து அவர்களது உறவுகளின் கண்ணீருக்கு விடை தரப்படவில்லை.புத்த பகவான் சாவீடு காணாத வீட்டில் மிளகு கேட்டதன் மூலம் இறந்தவரை எழுப்ப முடியாது என விடையளித்தார். யுத்தத்தில் காணாமல் போனோர் உண்மையில் இரகசிய தடுப்பு முகாம்களில் இருப்பரேயானால் அவர்களின் பட்டியலை வெளியிடலாம்.அவ்வாறில்லாவிடில் மரணச் சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்கலாம்.அல்லது புத்தர் போல சாவீடு காணாத வீட்டில் இருந்து மிளகைக் கொண்டு வாருங்கள்.காணாமற் போனோரை கண்டு பிடித்துத் தருகிறேன் என்றாவது சொல்லலாம். எதுவுமேயில்லை…எதுவுமேயில்லை.நீள்கிறது உறவுகளின் கண்ணீர்ப் பயணம்.
விழிச்சான்குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 62

வாய்க்குளை நுழையாத பேருகளோடையெல்லாம் கன வங்கியளும், நிதி நிறுவனங்களும் யாழ்ப்பாணத்துக்கை காலடி எடுத்து வச்சிருக்குதுகள்.எங்கடை சனத்துக்கு உதவுறதே தங்கடை ஒரே குறிக்கோள் எண்ட அறிவிப்பினையும் இவை விடுக்கினை.என்னதான் இல்லாட்டிலும் நகை அடகு பிடிக்கிறதிலையும்,லீசிங் குடுக்கிறதிலையும் இவை எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு முன்னுக்கு நிக்குதுகள்.அது எங்கடை விசியந் தெரிஞ்ச பிள்ளையளுக்கும் வசதியாய்ப் போச்சுது.
அவனவன் லீசிங்கிலை ஓட்டோவையோ,வானையோ வாங்கிப் போட்டு,லீசிங் கட்டிறதுக்கு உழைக்கவே கஷ்டப்படுகிறாங்கள்.பிழைக்கத் தெரிஞ்சவை வேறை வழியைக் கண்டு பிடிச்சு இன்னொரு தொழிலுக்கான முதலீடாய் இந்த லீசிங் வாகனங்களைப் பயன்படுத்தினை. என்ரை பேரப்பெடியன் ஒருத்தன் கம்பஸ்சுக்குப் போய் மனேச்மென்ட் படிச்சுப் போட்டு,பட்டம் எடுத்த கையோடை அரசாங்கம் தங்கத் தட்டிலை வைச்சு வேலைக்கான கடிதத்தைத் தரும் எண்டு பாத்தான்.மூண்டு வரியமாய்க் காத்திருந்து களைச்சுப் போய் இஞ்சை கடை விரிச்சிருக்கிற ஒரு லீசிங் கொம்பனியிலை வேலை செய்யிறான்.நாங்களும் அதைக் காட்டித்தான் அவனுக்கு ஒரு பொம்புளை பாக்க வேண்டிக் கிடக்குது.
ஒருநாள் பொடி ஒரு ஓட்டோவோடை வந்தான்.வேலைக்குச் சேந்து கொஞ்ச நாளைக்குள்ளை ஒரு ஓட்டோ வாங்கீட்டானோ எண்டு எண்ணிப் போட்டு அவனிட்டைக் கேட்டன்.அவன் சொன்ன கதையைக் கேக்க எனக்குத் தூக்கி வாரிப் போட்டுது.பிழைக்கத் தெரிஞ்ச ஒருத்தன் ஒரு சைக்கிளை வாங்கி அதிலை போய்ச் சங்கிலி அறுத்திருக்கிறான்.சங்கிலியை வித்துப் போட்டு, ஒரு மோட்டர் சைக்கிளை லீசிங்கிலை எடுத்துப் போட்டுத் தொழிலைத் தொடர்ந்திருக்கிறான். பிறகு அதின்ரை கணக்கைச் செற்றில் பண்ணிப் போட்டு ஒரு ஓட்டோவை லீசிங்கிலை எடுத்திருக்கிறான்.ஏதோ கெட்டகாலம் தொழிலைத் தொடர விடவில்லை.அட்டமத்திலை சனி இருந்து அவனைக் கம்பியெண்ண வைச்சிட்டுது.இவன்தான் கொம்பனி சார்பிலை லீசிங் குடுத்தவன்.கோடு கச்சேரி ஏறி, தீர்ப்பு முடிய ஓட்டோவை எடுத்து வந்திருக்கிறான். கொம்பனிக்கு கொள்ளை லாபம்.இனியும் ஆரேனும் வருவான்தானே!
ஒரு சினிமாப் படத்திலை வாற காட்சி ஒண்டிலை ஒருத்தர் தொழிலில்லாமல் கஷ்டப்படுவார். யோசித்துப் பார்த்திட்டு ஒரு சாமியாராய் இருக்கலாம் எண்டு முடிவு செய்வார்.காவியுடை தரிச்சு ஒரு மரத்தடியிலை இருப்பார். அடுத்த காட்சியளிலை அவர் சைக்கிளிலிலை போவார்.மோட்டார் சைக்கிளிலை போவார்.பிறகு காரிலை போவார்.பிறகு பிளேனிலை போவார்.அது போலைதான் திருட்டு பிஸினசையும் நம்மாட்கள் நல்லாத்தான் இம்புறூவ் பண்ணியிருக்கிறாங்கள்.
அண்மையிலை எங்கடை பக்கங்களிலை இன்னொரு சம்பவமும் நடந்திருக்குது பாருங்கோ. திடீரென்று ஒரே நாளிலை ஊரிலை கட்டியிருந்த நாலைஞ்சு ஆடுகள் காணாமல் போயிடும். ஒருத்தன் ரண்டு பேர் வந்து இப்பிடிக் களவெடுத்துக் கொண்டு போகேலாது.சருகுபுலியளும் இந்தப் பக்கத்திலை உலாவுறதில்லை.அப்பிடி உலாவினாலும் அதுகளும் பகலிலை மனிசர் உலாவுற இடத்திலை கதறக் கதற ஆடுகளை இழுத்துக் கொண்டு போகேலாது. ஒவ்வொரு இடத்திலையும் நாலைஞ்சு ஆடுகளுக்குக் குறையாமல் காணாமல் போன நிலையிலை சனம் கொஞ்சம் அலேட்டாகி விட்டுது.
ஒரு வெள்ளை நிற மகேந்திரா ட்றக் வந்து நிண்டது.அதிலையிருந்து இறங்கின ஒருத்தன் தெருவிலை கட்டியிருந்த ஆடொன்றை அவிட்டு,ட்றக்குக்குள்ளை ஏத்தேக்கை ஆடு அவலக் குரல் எழுப்பியிருக்குது.உடனை சனமும் அலேட்டாகி கள்ளன் எனக் கத்தியிருக்குது.பெடியள் மோட்டச் சைக்கிளிலையும், வானிலையும் வெள்ளை ட்றக்கைக் கலைக்கத் தொடங்க சினிமாப் படப் பாணியிலை ஒரே துரத்தல்தான்.இடையிலை றபிக்பொலிசும் மறிக்க,அவனை இடிச்சுப் போட்டு நிக்காமல் ஒரே ஓட்டம். பின்னாலை கலைச்சு வந்தவங்களும் விடாமல் துரத்தினாங்கள். பொலிசும் அடுத்த பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிச்சுப் போட்டுது.கடைசியிலை பொலிசால் பிடிக்கப்பட்டு றைவரும், மற்றவரும் இப்ப கம்பி எண்ணுகினை.எந்த லீசிங் புண்ணியவான் குடுத்ததோ தெரியாது.
இப்பிடி குறுக்குவழி பிஸ்னஸ் கடைசியிலை ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்திலை ராசா. பிடிபட்டவனுக்கு அட்டமத்திலை சனி எண்ட நிலைக்குத்தான் வரும் எண்டது பலபேருக்குப் பிடிபடும் வரைக்கும் புரியிறதேயில்லை.எல்லாத்துக்கும் கடவுளுக்குக் கணக்குக் குடுக்க வேணும் கண்டியளோ! கடவுள் கணக்கைத் தீர்த்து வைக்கிறதும் இப்பிடித்தான் பாருங்கோ!
விழிச்சான்குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 61

இப்ப வெடிவால் முளைச்சுத் திரியிற பெடியளைப் பாக்கேக்கை எங்கடை காலந்தான் ஞாபகத்துக்கு வருகுது பாருங்கோ.நாங்கள் அப்பு கீறின கோட்டைத் தாண்டாமல் வாழ்ந்தனாங்கள். வெள்ளாப்போடை எழும்பி, விறைக்கிற குளிரிலை அப்புவோடை போய், அப்பு துலா மிதிக்க பட்டையிலை கோலித் தண்ணியள்ளி ஆயிரங்கண்டு மிளகாய்க்கோ,கத்தரிக்கோ தண்ணி இறைச்சுப் போட்டுத்தான் பள்ளிக்கூடம் போனனாங்கள்.பின்னேரம் வந்தாலும் ஒரே வேலை. இரவிலை வாத்தியார் தாற வீட்டு வேலையளைச் செய்ய வேணும்.இல்லாட்டில் துவரங் கம்பாலைதான் விளாசுவார்.அடி வாங்கி அழுது போட்டுத்தான் இருக்கேலும்.வீட்டிலை சொல்லேலாது.கொஞ்சம் முறுகினாலும் வாத்தியார் கொப்பரைக் கூட்டி வா எண்டிடுவார்.அப்பு வந்தால் வாத்தியாருக்கு முன்னாலை வச்சுத் தோலுரிப்பார்.ஏனெண்டு கேக்க ஆருமில்லை.
அடியாத மாடு படியாது.அடியைப் போல அண்ணன் தம்பியும் உதவ மாட்டினை எண்டு சொல்லிச் சொல்லித்தான் அடி விழும்.அடியை நினைச்சே அல்ஜீப்ராவும்,ஜோமற்றியும் மனசுக்குள்ளை வந்திட்டுது.பாரதச் சுருக்கமும்,இராமாயணமும்,தேவாரமும்,இலக்கணச் சூத்திரங்களும் மனப்பாடம். அடியின்ரை பயத்திலை படிச்சதாலை கோழி மேய்ச்சாலும் கோறணமேந்திலை மேய்க்க வேணும் எண்ட அப்பு ஆச்சியின்ரை விருப்பத்தை நிறைவேத்தி இண்டைக்கு ஒரு மனிசனாயத் தலை நிமிர்ந்து நிக்கிறம்.
அந்தக் காலத்திலை எங்கடை கையிலை காசைக் காணுறது அருமை பாருங்கோ! எங்கையாவது கோயில் திருவிழா,காத்தான் கூத்து எண்டால் ஐஞ்சோ பத்துச் சதம் கிடைக்கும்.அதுவும் பெரியாக்கள் ஆரோடையுந்தான் அனுப்புவினம்.சினிமாப் படத்துக்கெல்லாம் போகேலாது. ஆரோடையும் களவாய்ப் போனாச் சரி.பிடிபட்டால் அதோகதிதான்.
எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் பிழை விட்டால் ஒண்டில் வாத்தியார் அடிப்பார்.இல்லாட்டில் அப்பு அடிப்பார்.ஆனா அவையும் சும்மா அடிக்க மாட்டினம்.அவை எள் எண்டால் நாங்கள் எண்ணையாய் நிப்பம்.நிக்காட்டில்தான் அடி.அடிக்கிற மாதிரித்தான் அவை எங்களிலை அன்பும்,கரிசனையும். என்ன பாடமெண்டாலும் தெளிவு படுத்தி விடுவினை.இப்பத்தைச் சில பெரிய வகுப்பு வாத்திமார் பிள்ளையளுக்குப் பள்ளிக்கூடத்திலை படிப்பிக்கிறேல்லையாம்.பிள்ளையளைத் தான் ரியூசன் குடுக்கிற இடத்திலை வந்து படிக்கச் சொல்லுவினையாம்.அப்ப ரியூசனும் இல்லை.மேலதிக நேரங்களும் நிண்டு படிப்பிப்பினம்.தங்களைப் பள்ளிக்கூடங்களுக்காக அர்ப்பணிச்சுப் படிப்பிச்சினம்.
அவை எல்லாரும் உளவியல் படிச்சு வரேல்லை.அப்பு ஆச்சிக்கு உதெல்லாம் எங்கை தெரியும்? சமூக ஒருங்கிணைவு எண்டும், சிறுவர் உரிமையள் எண்டும் இண்டைக்குப் பெடி பெட்டையளுக்கு அழுத்திச் சொல்லுற சமாச்சாரங்கள் எதுவும் அண்டைக்கில்லை.இண்டைக்கு வாத்தியார் அடிக்கேலாது.ஏசக் கூட ஏலாது.எங்கை இதையெல்லாம் பாத்து ஆளைக் கோடு கச்சேரிக்கு ஏத்தலாம் எண்டு கனபேர் காத்துக் கொண்டிருக்கினை.கொழுத்த சம்பளத்திலை கள்ளன் பிடிக்கிற ஆக்கள் மாதிரி அவை இருக்கினம்.
வெடிவால் முளைச்சதுகளுக்கு இதெல்லாம் நல்ல செய்தி பாருங்கோ.பள்ளிக்கூடத்திலையும், வீட்டிலையும் பேரம் பேசிற சக்தி அவங்களுக்கு வந்திட்டுது.வெளிநாட்டுக் காசு வேறை. வெளியிலை வெளிக்கிட்டுத் திரிய இருக்கிறது ரியூசன் சாட்டு.நண்டு கொழுத்தால் புத்துக்கை நிக்காது.காசுள்ள இளசுகள் சேர்த்தால் கேக்கவும் வேணுமோ? ஊசியைக் காந்தம் இழுக்கும். உத்தமனைச் சினேகம் இழுக்கும் எண்டு சும்மாவே சொன்னவை. இதுகளைக் கண்டிக்க வெளிக்கிட்டால் மனித உரிமை,சிறுவர் உரிமை மீறலாயிடும்.கவனமாயிருங்கோ!
எங்கடை பிள்ளையளைக் கட்டாக்காலிகளாக்கிற வேலையைத்தானே இந்த உரிமையள் எல்லாந் தருகுது.அதுகளை நல்வழிப்படுத்திற மார்க்கங்களைச் சொல்லுறதை விட்டிட்டு அதுகளைத் தலையாலை அழிக்கிற வேலையளையல்லோ இவை செய்யினை.எங்கடை கல்விச் சீரழிப்புக்கு இதுகளும் காலாயிருக்கிறதை நாங்கள் பலபேரும் வசதியாய் மறந்திட்டமோ?
விழிச்சான்குஞ்சு

வியாழன், 15 டிசம்பர், 2011

வியளம் கேட்டீர்களா? 60

இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இராது என்றொரு பழமொழியுள்ளது. வாகனத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இப்பழமொழியைப் பலரும் ஞாபகப்படுத்துவதுண்டு. இரும்பு எமது வாழ்வில் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது. ஆரியர்களின் வருகையுடனேயே இலங்கையில் இரும்பின் பாவனை ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது. விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப் பயன்பட்ட இரும்புப் பெட்டகம் முதல் அலவாங்கு,மண்வெட்டி,உரல்,கத்தி,கட்டில் எனப் பெருமளவில் இரும்பால் செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்திய காலம் சில தசாப்தங்கள் முன்பு வரை இருந்தது.
 ஆனால் இன்று பிளாஸ்ரிக் பொருட்களே இரும்பின் இடத்தை அதிகளவில் ஆக்கிரமித்து நிற்கின்றன.தவிர்க்க முடியாத சில பொருட்கள் இரும்பாலானவையாக உள்ள போதிலும் அன்றாடப் பாவனைப் பொருட்கள் பலவும் பிளாஸ்ரிக் மற்றும் சில்வரால் ஆனவையாகவே உள்ளன.இவை விலை மலிவானவையும் கூட.எனவே இரும்பின் முக்கியத்துவம் நமது சூழலில் மெல்ல மெல்லக் குறைந்து போயிற்று.
இன்று இரும்புக்கு என்ன நடக்கிறது?பலரது அன்றாடத் தொழிலாக இரும்பு சேகரித்தல் மாறியுள்ளது.ஒரு பெட்டியைக் கட்டிக் கொண்டு சைக்கிளிலோ,மோட்டார் சைக்கிளிலோ சென்று வீடு வீடாக பழைய இரும்பினைச் சேகரிப்பதில் பலரும் ஈடுபட்டுள்ளனர்.அவற்றை விலை கொடுத்து வாங்குவதற்கான கடைகள் ஒவ்வொரு இடங்களிலும் உள்ளன.அங்கிருந்து லொறிகள் மூலம் அவை யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டு,பெரிய முதலாளிகளால் வாங்கப்பட்டு தென்பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
ஒரு காலத்தில் “போத்தல்..பித்தளை..அலுமினியம்..பழைய சரிகைச் சாறி இருக்கா..” எனக் கூவிக் கொண்டு இத்தகைய வியாபாரிகள் வந்தனர்.பழைய போத்தல்,உடைந்த அலுமினியப் பானை முதலியவற்றை ஐஸ்கிறீம் விற்பவனிடம் கொடுத்து ஐஸ்பழம் வாங்கிய நினைவுகள் கிராமத்தவர்கள் பலரிடமும் இருக்கும்.இன்று அந்நிலை மாறி இரும்பு இருக்கா எனக் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில் இரும்பு தேடியவர்கள் திருட்டில் ஈடுபட்ட சம்பவங்களும் இடம்பெற்றன. போதாததற்கு சுடலையில் கட்டை அடுக்கப் பயன்படும் குத்துக்கால், மின்கம்பிகள், உடைந்த மின்கம்பங்கள் ஆகியனவும் இவர்களின் கைவரிசையில் இடம்பிடித்தன.வலி.வடக்கில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் ஆளற்ற வீடுகள்,ஆலயங்கள்,பொது இடங்களில் இவை கேட்டுக் கேள்வியின்றித் திருடப்படுவதாகவும்,இவற்றைச் செய்பவர்களைத் தட்டிக் கேட்க முடியவில்லை எனவும் அங்குள்ள ஒருவர் சொன்னார்.
சனங்களும் வளவுக்குள் அரியண்டமாகக் கிடக்கும் இரும்புப் பொருட்களைக் “கருமங் கழித்து” வீடு தேடி வரும் வியாபாரிகளிடம் கொடுத்து வருகின்றனர்.இன்னுஞ் சில காலத்தில் மருந்துக்கும் ஒரு இரும்புத் துண்டைக் காண முடியாது என ஆதங்கப்பட்டார் ஒரு முதியவர்.இந்த இரும்புகள் கிலோவுக்கு பத்து ரூபா, இருபது ரூபா விலையில் வீடுகளில் கொள்வனவு செய்யப்படுகின்றன. வியாபாரிகளிடமிருந்து உள்ளுர் கடைகள் முப்பது ரூபாவுக்கு இவற்றைக் கொள்வனவு செய்கின்றன. இவை கொழும்பு சென்று புத்தம் புதிய இரும்பாக மீண்டு வரும் போது அதே கிலோவின் விலை ஆயிரம் ரூபாவைத் தாண்டும்.
பெரியவர் சொன்னது போல இரும்பு எமது கண்ணிலிருந்து மெல்ல மெல்லக் காணாமல் போய் விடும் போலுள்ளது.இதுதான் அம்மி,இதுதான் ஆட்டுக்கல்,இதுதான் திரிகை என்று படத்தைப் பார்த்துச் சொல்வது போல் இதுதான் இரும்பு என்று எதிர்காலப் பிள்ளைகளுக்குச் சொல்லும் நிலையும் வரலாம்.அரும்பொருள் சேகரிப்பவர்களே…இரும்பையும் சேகரித்துக் கொள்ளுங்கள் நமது பிள்ளைகளுக்குக் காட்ட.
விழிச்சான்குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 59

திரையரங்குகளில் ஒரு திரைப்படம் 100 நாள் ஓடினால் அதற்குப் பெரிய கொண்டாட்டம் இடம்பெற்ற மண் இது.வாத்தியார்(எம்.ஜி.ஆர்) ரசிகர்களும்,சிவாஜி ரசிகர்களும் வரிந்து கட்டிக் கொண்டு தமது தலைவர்களின் பெரிய கட்டவுட்டுகளுக்கு பாலாபிசேகம் செய்தும், கேக் வெட்டியும் விழாக் கொண்டாடினர்.அவர்களின் மேதாவிலாசங்கள் பேசும் சஞ்சிகைகளும் வெளிவந்தன.ரசிகர்களுக்கு இடையிலான குழு மோதல்கள் கூட இடம்பெற்றன.திரையில் காட்டப்படும் கதாநாயகன் முதற்தடவையாக வரும் காட்சியை இடைநிறுத்தி, அதற்குத் தீபம் காட்டும் கோமாளித்தனங்களும் அரங்கேறின.அந்தக் காலம் போய் விட்டது.இடையில் இந்தக் கூத்துக்கள் அருகிப் போயிருந்தன.இப்போதுதான் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்புவதால் நமது இயல்பும் திரும்பக் கூடும.;அதைக் கட்டியங் கூறும் நிகழ்வுகளும் ஆங்காங்கு நடந்துள்ளன.
உலகமே ஒரு நாடகமேடை.அதில் நாமெல்லாரும் நடிகர்கள் என்று ஷேக்ஸ்பியர் சொன்னாலும் சொன்னார். எம்மில் பலரும் நாடக மேடையின் விதமான கதாநாயகர்களாகத் தம்மைப் பாவனைப் படுத்தத் தொடங்கி விட்டனர்.இல்லாவிட்டாலும் அவர்களை அந்நிலைக்கு உயர்த்துவதற்காகப் பாடுபட்டு,தாமும் சிலவகை நன்மைகளைப் பெறும் துணைநடிகர்களும் இருக்கிறார்கள்.
உங்களுக்கும் கதாநாயகர்களாக வர ஆசையிருக்குந்தானே!உங்களை கதாநாயகர்களாகக் காட்ட நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை இப்பத்தி ஆராயும்.உங்களைக் கதாநாயகர்களாகக் காட்ட இருக்கவே இருக்கிறது பிறந்தநாள் விழா. நீங்கள் சமூகத்துக்கு ஏதாவது செய்யா விட்டாலும் பரவாயில்லை.தீமை செய்து,கெட்ட பெயர் எடுத்தால் கூடப் பரவாயில்லை.உங்களிடம் பசை(பணம்) இருந்தால் போதும்.கொஞ்சம் எடுத்து விசுக்கி விடுங்கள்.சில துணைநடிகர்கள் அப்பணத்தால் கவரப்பட்டு உங்களுக்கு விளம்பரம் தேட உதவுவர்.
பெரிய விழாவை ஏற்பாடு செய்யுங்கள்.சில பெரிய மனிதர்களை அணுகிக் கேட்டால் நீங்களே ஆச்சரியப்படும் வகையில் உங்களைப் புகழ்ந்து வாழ்த்துச் செய்திகளை எழுதித் தருவார்கள். பத்திரிகையில் அவற்றைப் விளம்பரப்படுத்தினால் நீங்கள் கீறோதான்.
நீங்கள் ஒரு அதிகாரியாக இருந்தால் அதிகநன்மையுண்டு. உங்களுக்குச் சாமரம் வீச இரண்டு பேராவது இருப்பார்;கள்.எனவே, அவர்களைச் சற்றுத் தூண்டினால் போதும்.குறித்த நிறுவனத்தில் இரண்டு வருடங்கள் வெற்றிகரமாகச் சேவையாற்றி வழிநடத்திச் செல்லும் செம்மலே!தொடர்ந்தும் பல்லாண்டுகள் எம்மை வழிநடத்த வாழ்த்துகிறோம் என்று ஒரு விளம்பரத்தைப் போடச் செய்யலாம்.இத்தகைய விளம்பரங்கள் ஏற்கனவே பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.அவற்றை முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.
ஒரு கல்வி அதிகாரி தற்காலிக அடிப்படையில் கடமையாற்றினார்.அவருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்து.அவர் சென்று நியமனம் பெறுவதற்கு முன்பே வாழ்த்துப் போடும் விசுவாச அதிபர்கள் இங்கு நிறைந்துள்ளனர் என்று சொன்னார் ஒரு ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர். கல்வி அதிகாரிகள் அத்தகைய அதிபர்களைச் சிக்கெனப் பிடித்தால் புகழ்மாலைக்குக் குறைவிருக்காது.அது போலவே எல்லா இடங்களிலும் எல்லா அதிகாரிகளும் சிற்றூழியர்களை உங்களுடைய உள்ளகப் புலனாய்வார்களாகவும், உத்தியோகப் பற்றற்ற மெய்ப்பாதுகாப்பாளர்களாகவும் வைத்திருந்தீர்களாயின் அவர்கள் உங்களைக் கேடயங்களாகப் பாதுகாப்பதுடன் உங்களது புகழ் பரப்பும் செய்தி நிறுவனங்களாகவும் செயற்படுவர்.
விழிச்சான் குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 58

வலது கை குடுக்கிறது இடதுகைக்குத் தெரியக் கூடாது எண்டு சொல்லுவினம்.கொடைக்குச் சிறந்த கர்ணன் கடைசியிலை கிருஷ்ணபரமாத்மாவுக்கு வாக்குக் கொடை குடுத்து மாண்டு போனதாக இதிகாசம் கூறுது.எங்கடை இலக்கியங்களிலை முதல்,இடை,கடை ஏழு வள்ளல்கள் பற்றியெல்லாம் பேசப்படுகுது.முல்லைக் கொடி படருறதுக்குத் தன்ரை தேரை ஈந்த பாரி, நடுங்கும் மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பற்றியெல்லாம் படிச்சிருக்கிறம்.அந்தக் காலத்துப் புலவர்கள் காவியங்களை,சிற்றிலக்கியங்களைப் பாடுறதுக்குப் பின்னாலை சடையப்ப வள்ளல் மாதிரி, செத்துங் கொடை குடுத்த சீதக்காதி வள்ளல் மாதிரி பலபேர் ஆதாரமாய் இருந்திருக்கினை. அவை புலவர்களை ஆதரிச்சு,பணம்,பொருள் உதவினதாலைதான் நல்ல இலக்கியங்கள் தமிழுக்குக் கிடைச்சது பாருங்கோ!
இண்டைக்கு இஞ்சை யுனிசெவ்,ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் முதலிய அமைப்புகள் எங்கடை பிள்ளையளுக்கு கன கன உதவியளைச் செய்யுது.இதுக்கான காசுகள் அவைக்கு வானத்திலை யிருந்து கிடைக்கேல்லை.மாறாக வெளிநாட்டிலை வாழுற தரும சிந்தனையுள்ள, பெரிய மனசு கொண்டவையாலை வழங்கப்படுற காசுகள்தான் எங்கடை பிள்ளையளுக்கு உதவுது பாருங்கோ. அவை தாங்கள் உழைக்கிற காசிலை ஒரு பகுதியை வங்கி மூலமாய் இந்த நிறுவனங்களுக்கு மாதாமாதம் அனுப்பி வைக்கினை.அந்தக் காசை ஒரு வெள்ளைக்காரனுக்குத்தான் குடுக்க வேணுமெண்டோ,குறித்த நாட்டுக்குத்தான் குடுக்க வேணுமெண்டோ அவை சொல்லேல்லை. தாங்கள் தாற பணத்துக்கு “உபயம் கேற் அன்டர்சன்,ஒன்ராரியோ,கனடா” எண்டு எழுதச் சொல்லியும் வற்புறுத்தேல்லை.அந்தக் காசு உலகத்திலை எங்கையோ ஒரு மூலையிலை இருக்கிற பிள்ளைக்கு உதவியாய் வந்து சேருது.அது எங்கை போனது எண்டு அவை அக்கறைப் படுறதில்லை.அவையின்ரை பெரிய மனசாலை செய்யிற இதுதான் உண்மையான தருமம் பாருங்கோ!
இஞ்சையும் அப்பிடித்தான். மடங்களை,சுமைதாங்கியளை,ஆவுரோஞ்சிக் கற்களை,கேணிகளை, சங்கடப் படலைகளை,பள்ளிக்கூடங்களைக் கட்டினவையும் தங்களுக்கு மட்டுமில்லை நாளைக்கு வரப்போற எல்லாருக்குமாய்த்தான் அதைச் செய்தவை.பலது ஆர் அமைச்சதெண்டும் தெரியாது.ஆடு,மாட்டுக்குக் கூட வாழ்வு குடுத்த சமூகமாய் நாங்கள் இருந்திருக்கிறம்.ஆனா இடையிலை எங்களிட்டை ஒரு தற்பெருமை வந்திட்டுது.அது கோயில் கோபுரங் கட்டி உபயம் போடுறதிலையிருந்து சின்னத் தட்டத்தை அன்பளிப்புச் செய்து விட்டு அந்தத் தட்டத்திலை இடைவெளியே விடாமல் உபயம் விழிச்சான்குஞ்சு எண்டு எழுதிறது வரை வளர்ந்திட்டுது.
வழித் தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு அடிச்சுப் போட்டு புகழ் தேடுற சங்கதியளும் கனக்க நடக்குது பாருங்கோ.வெளிநாடுகளிலை இருக்கிற எங்கடை புலம்பெயர்ந்த மக்கள் கஸ்டப்படுற சனத்துக்கு உதவுதுகள்.நேரை வந்து கஸ்டப்பட்டவைக்கு உதவுறது ஒரு பக்கம். இங்கையிருக்கிற அமைப்புகள் மற்றும் தனி மனிசரிட்டைக் குடுத்து உதவுறது இன்னொரு பக்கம். ஆனாப் பாருங்கோ இந்த வெளிநாட்டுத் தேங்காயை கையிலை எடுக்கிறவை அதைத் தந்தவைiயின்ரை பெயரை வசதியாய் மறைச்சுப் போட்டு தங்கடை உதவியாய் அதைக் காட்டினம் எண்டு என்ரை புலம்பெயர் நண்பரொருத்தர் கவலைப்பட்டார்.வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின்ரை உதவியளைப் பெற்றுக் கொண்டு, அதைத் தங்கடை உதவியளாய்க் காட்டிற உள்ளுர் அரசசார்பற்ற அமைப்புகளும்,சில அரசியல்வாதிகளும், சமூகத் தலைவர்களும் இருக்கத்தான் செய்யினை.பூவில்லாமல் மாலை கோர்க்கிற சூட்சுமம் தெரிஞ்சவை இவைதான் பாருங்கோ!
இப்பிடிக் கர்ணன் மாதிரி பிரகிருதியள் இல்லையோ எண்டால் இருக்கினை.ஆனால் அவை குடுத்தது ஆருக்குந் தெரியாது.குடுத்தவை தங்கடை விலாசத்தை வெளிப்படுத்த விரும்பாததாலை அதைச் சாதகமாய்ப் பாவிச்சு இங்கை அந்த உதவியளைப் பெற்றவை அதைத் தங்கடை உதவியாய், தங்கடை சொத்தாய் வெளிப்படுத்தினை எண்டும் புலம்பெயர் நண்பர் கவலைப்பட்டார்.நானும் பல இடங்களிலையும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறன்.ஆறு கடக்கிற வரை அண்ணன் தம்பி ஆறு கடந்தாப் பிறகு நீ யார் நான் யார் எண்ட பழமொழி மாதிரியும் சில சம்பவங்கள் நடந்திருக்குதாம்! ஆனால் “இட்டுக் கெட்டார் எங்குமில்லை” என்பதற்கிணங்க அவர்கள் வாழுறதும், “உருட்டும் பிரட்டும் ஒடுக்கும் சிறப்பை” என இவர்கள் தாழுறதும் நடக்கத்தான் செய்கிறது.
விழிச்சான்குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 57

தொலைபேசி மணியொலித்தது.எதிர்முனையிலிருந்து கீச்சுக் குரலில் ஒரு பெண் பேசினாள்.தான் ஒரு தனியார் கல்வி நிறுவனத்திலிருந்து பேசுவதாக அவள் தன்னை அறிமுகப்படுத்தினாள்.தமது கல்வி நிறுவனம் சர்வதேச தரத்தில் சிறுவர்களுக்கான ஆங்கிலக் கல்வியை அளிக்கும் ஒரு நிறுவனம் என்றும்,யாழ்ப்பாணத்தில் தற்போது தமது கிளையைத் திறந்து யாழ்ப்பாணப் பிள்ளைகளுக்குச் சேவையாற்ற முன்வந்துள்ளது என்றும் சொன்னாள்.
யாழ்ப்பாணத்துக்குப் பிள்ளைகள் வரத் தேவையில்லை எனவும்,வீட்டில் இருந்து படிக்கக் கூடியதாக ஒலிப்பதிவு நாடாக்கள்,மொடியூல்கள்,வீடியோ இறுவட்டுக்கள் மூலம் கற்பதற்கு வழிப்படுத்தப்படும் என்றும் கூறிய அப்பெண் என்னை வீட்டில் வந்து சந்திப்பதற்கான நேரத்தைக் கேட்டாள்.காப்புறுதி நிறுவனங்கள்தான் இதுநாள் வரை அலுவலகங்களிலும்,வீடுகளிலும் வந்து கதைக்க நேரம் கேட்டு,மனித நேரத்தை இழுத்து, சம்மதிக்க வைக்கப் பெரும் பிரயத்தனப்பட்டன. இப்போது வங்கிகள்,இதர நிறுவனங்களும் அந்த இடத்தைப் பிடித்துள்ளன.
சரி,இந்தப் பெண் எங்கே எனது தொலைபேசி இலக்கத்தைப் பெற்றாள் என அறிய விரும்பினேன். ரெலிக்கொம் நிறுவனத்தில் பெற்றதாகக் கூறினாள்.யாழ்ப்பாணத் தொலைபேசி இலக்கங்களைக் கொண்ட விபரத் திரட்டை ரெலிக்கொம் நிறுவனம் இதுவரை தொலைபேசிப் பாவனையாளரான – வாடிக்கையாளரான- எமக்கு வழங்கவில்லை.கொழும்பு இலக்கங்கள் கொண்ட வியாபார விபரத் திரட்டே இங்கு வழங்கப்பட்டது.ஆனால் இத்தகைய நிறுவனங்களால் மட்டும் எப்படிப் பெற முடிகிறதோ?
இது பற்றி எனது நண்பன் ஒருவனிடம் சொன்ன போது அவன் இதைவிடச் சிறந்த சேவையை அது அளிக்கிறது என்று நக்கலாகச் சொன்னான்.தமது பிரதேசத்தில் தொலைபேசி கேபிள்கள் செல்லும் இடங்களில் உள்ள தடைகளை ரெலிக்கொம் நிறுவனம் (அல்லது அதனால் பொறுப்பளிக்கப்பட்ட நிறுவனம்)அகற்றியதாம்.அதாவது வேலிக் கதியால்களை வெட்டித் தறித்தது.வெட்டென்றால் தாறுமாறான வெட்டு.அது பரவாயில்லை.வெட்டிய தடிகள் எல்லாம் வீதியை நிறைத்து போக்குவரத்துக்குத் தடையாகக் கிடந்தன.அது உரிமையாளர் இல்லாத காணி.எனவே அப்புறப்படுத்த யாருமில்லை.சனங்களும் பார்த்துக் கொண்டு போனார்கள். பகலிலேயே விபத்துக்கள் சம்பவித்தன என்றால் இரவில் எப்படியிருந்திருக்கும்? நான்கு நாட்களின் பின்னர் ஊர் இளைஞர்கள் அதை அகற்றி,உரிமையாளரின் காணிக்குள் போட்டார்கள்.
வெட்ட வேண்டியவற்றை வெட்டத்தான் வேண்டும்.பாவனையாளர்கள் அல்லது பொதுமக்கள் கவனிக்காமல் விட்டதை நிறுவனம் செய்வது வரவேற்கத்தக்கதே.ஆனால் வெட்டியவற்றை வீதியை மறித்துப் போடும் பொறுப்புணர்வின்மையைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.சில இடங்களில் மின்சார சபையினரும் இதையே செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாட்டில் தனியார் கல்வி வியாபாரிகளின் மோசடி பற்றி சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வீ.அரசு அண்மையில் இங்கு வந்து யாழ்.பல்கலைக்கழகத்தில் பேசும் போது குறிப்பிட்டிருந்தார்.புதிய உத்திகள்,புதிய முறைமைகள் என்றெல்லாம் விளம்பரக் கவர்ச்சியூட்டி இந்த நிறுவனங்கள் மக்களைச் சுரண்டிப் பிழைப்பதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அவர்களிடம் காசை வாரியிறைத்த மக்கள் நன்மையடைந்தார்களோ இல்லையோ அவர்கள் கோடீஸ்வரராகி,பெரும் பெரும் கட்டடங்களை அமைத்துத் தொழிலை விரிவாக்கிக் கொண்டனர் என்பதை அவர் தனது உரையில் சுட்டிக் காட்டியிருந்தார்.
2000ங்களின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு நிறுவனம் புதிய வழியில் ஆங்கிலக் கற்கையை ஆரம்பிப்பதாகக் கூறி, இலவச அறிமுக வகுப்புக்களை வைத்து, மொத்தக் கட்டணமாகக் காசைத் திரட்டியது. முதல் மூன்று நான்கு மொடியூல்களையும் கொடுத்தது.பலரும் அதில் சேர்ந்து கொண்டனர்.ஆயினும் அந்த நிறுவனம் சில காலத்தின் பின் இழுத்து மூடப்பட்டது. காசு கட்டியவர்களின் பாடு அம்போதான்.இப்போது அந்த நிறுவனம் வேறொரு லேபலுடன் இங்கு வந்து ஆங்கிலக் கல்வியை அளித்து வருகிறதாம்!
யாழ்ப்பாணம் கல்விக்கு முதன்மையளித்து வருகின்ற ஒரு சமூகமாக அடையாளப்படுத்தப் பட்ட காலமொன்றிருந்தது.இங்குள்ள கல்லூரிகளில் இலங்கையின் நாலாபுறங்களிலும் இருந்து வந்தவர்கள் கல்வி கற்றனர்.இன்று குறிப்பிடத்தக்க மலையக மற்றும் சிங்கள புத்திஜீவிகள் பலரும் இங்குள்ள கல்லூரிகளில் கற்றுச் சித்தியடைந்தவர்களே! அத்தகைய கல்வியினை அளிக்கும் தலைமைக் கேந்திரமாக யாழ்ப்பாணமே விளங்கியது.
ஆனால் அண்மைக் காலத்தில் அதன் கல்வித்தரம் வீழ்ந்துள்ளதாகப் பலரும் கூறுகின்றனர்.இன்று பாடசாலைகளை விட விளம்பரக் கவர்ச்சியூட்டி, காசுழைக்கும் தனியார் கல்வி வியாபாரிகளை யாழ்ப்பாணச் சமூகம் அதிகளவில் நம்பியதுதான் யாழ்ப்பாணக் கல்வித் தர வீழ்ச்சிக்குக் காரணம் எனலாமோ?ஓடியோடி அங்கிங்கென ஓய்வின்றிப் படிக்கும் பிள்ளையின் மனதில் தூவப்படும் எல்லாக் கருத்துக்களும் அதனுள் உருண்டு திரண்டு உருமாறி அதனை அலைக்கழிப்பதை யாரறியவார்?அதுதான் பரீட்சைத் தோல்விகளாக வெளிப்பாடடைகின்றன என்கிறார் கல்வி உளவியலாளர் ஒருவர்.
விழிச்சான்குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 56

எங்கடை காலத்திலை வாத்தியாற்றை(எம்.ஜி.ஆர்) படத்திலை “மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்.ஒரு மாற்றுக் குறையாத மன்னன் இவன் என்று போற்றிப் புகழ வேண்டும்”; எண்டொரு பாட்டு வரும் பாருங்கோ.அப்ப நாங்களும் இந்தப் பாட்டுக்கு இலக்கணமாய் எம்.ஜி.ஆர் மாதிரி இருக்க வேண்டுமெண்டு நினைச்சம்.அது கை கூடேல்லை.
ஆனால் கன பேர் மாற்றுக்குறையாத மன்னன் எண்டதை விட்டிட்டு, மாலைகள் விழுகிறதுக்கான வழியைக் கச்சிதமாய்க் கண்டு பிடிச்சிட்டினை.என்னட்டைக் கொஞ்சம் காசும்,ஒண்டு ரண்டு வால்பிடியளும் இருந்தால் காணும்.ஊரிலை ஒரு வாசிகசாலையிலையோ,மண்டபத்திலையோ ஒரு பாராட்டு விழாவை நடத்தி மாலையள் போட்டு, நாலு பெரியவையைக் கூப்பிட்டுப் பேச்சுப் பேசி, தர்மவள்ளல் மாதிரி அந்த விழாவிலை வைச்சு ரண்டு பேருக்கு உதவி செய்து,பத்திரிகையிலை விளம்பரம் போட்டு..பெரிய மனிசராகிடலாம்.
ஒரு முறை ஒருத்தருக்கு சமாதான நீதிவான் பதவி கிடைத்தது.அவர் பற்றி சமூகத்தின்ரை பெரிய மனிசர் ஒவ்வொருத்தரும் தனித்தனியே பத்திரிகையில் வாழ்த்துத் தெரிவிச்சிருந்தினை.இந்தாள் இப்பிடிச் செல்வாக்கான ஆளோ எண்டு நினைச்சுப் போட்டு வாழ்த்துப் போட்ட ஒருத்தரைக் கேட்டேன்.அதற்கு அவர் தலையில் அடித்துக் கொண்டு, “ஏதோ ஒரு மலர் போடப் போகிறேன் எண்டு சொல்லி மனிசன் காலமை பின்னேரம் வந்து கரைச்சல் படுத்தி வாங்கி,தன்ரை காசிலை தனக்குப் பத்திரிகையிலை விளம்பரம் போட்டிட்டுது.கன பேர் எடுத்து என்னை ஏசிப் போட்டினை. இப்பிடியானதுகளை நாங்கள் ஆதரிக்கக் கூடாது எண்டு தீர்மானிச்சிட்டன்” எண்டு சொன்னார். இப்பிடிக் குறுக்கு வழிக் குபேரன்கள் கனபேர் வெளிக்கிட்டிருக்கினையெண்டதுதான் கவலையான செய்தி.அண்மையிலை ஒரு உளமருத்துவரின்ரை நூல்வெளியீட்டிலை பேசின வைத்திய நிபுணரொருவர் எண்டைக்கு மாலை மரியாதைகளுக்கு முக்கியத்துவம் குடுக்கத் தொடங்கிச்சோ அண்டையிலையிருந்துதான் யாழ்ப்பாணம் வீழ்ச்சியடையத் தொடங்கியது எண்டு பேசியிருக்கிறார். அதுபோலை உளவியல் நிபுணர் ஒருத்தர் இதை ஒரு சமூகநோயாகப் பாக்கிறார்.இந்தச் சமூக நோய்தான் எங்கடை சமூகத்தின்ரை வீழ்ச்சிக்குக் காரணம் எண்டு சொல்லியிருக்கிறார்.
அதுக்கு நல்ல உதாரணம் அண்மையிலை அதிபர்,ஆசிரியருக்கு ஜனாதிபதி மாளிகையிலை வச்சுக் குடுத்த குருபிரதீபா பட்டம்.அந்தப் பட்டத்தைப் பெறுறதுக்கான நிபந்தனையளுக்குப் பொருத்தமில்லாத பலர் அந்தப் பட்டத்தைப் பெற விண்ணப்பிச்சிருக்கினை.அதிகாரியளின்ரை ஆசீர்வாதத்திலை அவை சிபார்சு செய்யப்பட்டு, ஜனாதிபதியிட்டை விருது வாங்கி, விளம்பரங்கள் போட்டு மகிழ்ந்திருக்கினை.பல தகுதியான நல்ல ஆத்மாக்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கேல்லை.எனக்கு விருது தா எண்டு நான் கேட்டுப் பெறுறதில்லை.பொருத்தமோ எண்டு பாத்து அவை தர வேணும் எண்டது அந்த ஆத்மாக்களின்ரை வாதம்.
உண்மையிலை பல இடங்களிலை ஒராளே விண்ணப்பிச்சு,அவருக்கு விருது கிடைச்சது. அவையளும் விளம்பரத்திலை குறித்த வலயத்திலை இவைதான் சிறந்த அதிபராக,ஆசிரியராக வெளிப்படுத்தி விழிக்கப்பட்டிருப்பினை. இப்பிடித்தான் சமாதான நீதிவான் பட்டமும்.ஒரு அரசியல்வாதியின்ரை தயவிலை கிடைக்கிற அந்தப் பட்டத்தைப் பலரும் வானத்திலையிருந்து தேவதூதன் தந்த பட்டமாகக் கருதி, விளம்பரந் தேடுறதுதான் பெரும்பகிடி பாருங்கோ.
என்ரை பிறன்ட் ஒருத்தன் கொஞ்சம் சமூகசேவையளிலை நாட்டங் கொண்டவன்.எலக்சனிலை ஒரு அரசியல்வாதிக்குப் பின்னாலை நிண்டவன்.அரசியல்வாதி வெற்றி பெற்றாப் பிறகு “நானுனக்கு ஏதாவது செய்ய வேணும்.ஒரு அகில இலங்கை சமாதான நீதிவான் பட்டம் பெற்றுத் தாறன்” எண்டு சொல்லிப் போமை நீட்டினார்.அவனோ “என்ன தந்தாலும் அது மட்டும் வேண்டாம்” எண்டு மறுத்திட்டான்.அதுக்கு அவன் ஊரிலை மிகக் கெட்ட வேலையள் செய்யிற சிலபேர் சமாதான நீதிவானாக இருக்கிறதாலை அந்தப் பட்டமே இப்ப இளக்காரமாயப் பாக்கப் படுகிறதுதான் எண்டு காரணமும் சொன்னான்.
அதிகார வர்க்கங்கள் இப்பிடிக் குறுக்கு வழியிலை புகழ் தேடிற, சலுகைகளுக்காகக் கூழைக்கும்பிடு போடுற, சுயதம்பட்டமடிக்கிற நோயாளிச் சமூகங்களை உருவாக்கிறதிலை கண்ணுங் கருத்துமாயிருக்கும்.அதுதான் வெள்ளைக்காரன் காலத்திலையிருந்து எங்கடை போன்ற நாடுகளிலை நடக்குது எண்டு சொன்னார் ஒரு கொம்யூனிசக்காரர்.
மாற்றுக் குறையாத மன்னவர்களாய் சமூகத்துக்குச் சேவை செய்யிற மனிசருக்கு மாலை மரியாதை செய்யிறதை விட்டிட்டு,காசை வைச்சிருக்கிற குறுக்கு வழிக் குபேரர்களுக்கு மரியாதை செய்து, அவையை மேலை உயர்த்திக் கொண்டிருந்தால் யாழ்ப்பாணம் இலங்கையின்ரை கடைநிலைக்குப் போறதை ஆராலும் தடுக்க முடியாது கண்டியளோ!
விழிச்சான்குஞ்சு

செவ்வாய், 13 டிசம்பர், 2011

வியளம் கேட்டீர்களா? 55

சந்தைக்குப் போய் வெங்காயம் வாங்கும் போதெல்லாம் உரிக்;க உரிக்கத் தோல் அது என்ன? என்று சிறு வயதில் படித்த விடுகதைதான் ஞாபகத்துக்கு வருகிறது.ஒரு வேலையைச் செய்யச் சொன்னால் அந்த வேலையைச் செய்யாது வேறு வேலையைச் செய்பவர்களை, அறிவிலிகளை வெங்காயம் என்றே அழைப்பர்.வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன? என்பது சித்தர் பாடல்.இங்கே வெங்காயம்,சுக்கு,வெந்தயம் ஆகியன வருகின்றன. மூன்றும் மருத்துவப் பயன்பாடுடையவை.சமையலில் பயன்படுத்தப்படுபவை.ஆனால் இந்தப் பாட்டின் கருத்து அதுவல்ல. காயம் என்பது உடம்பைக் குறிக்கும்.இந்த வெம்மையான உடம்பு என்றோ ஒருநாள் சுக்குநூறாக அழியப் போகிறது.அவ்வாறு அழியும் போது எம்மிடம் உள்ள அவா,பொறாமை,வஞ்சகம்,பெருமை பேசுதல்,திமிர் எல்லாமே அழிந்து விடும்.எனவே, இந்த உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் என்பதை இப்பாடல் வெளிப்படுத்துகிறது.
வெங்காயம் தமிழர்களின் சமையலில் முக்கியமான சுவைச்சரக்காகும்.வெங்காயக்குழம்பு, வெங்காயச் சம்பல்(சீனிச்சம்பல்) என்பன முக்கியமானவை.சின்ன வெங்காயம்,வேதாளக்காய் எனப்படும் பெரிய வெங்காயம் இரண்டும் இங்கு செய்கை பண்ணப்படுகின்றன.இற்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்பு வரை யாழ்ப்பாணத்து வெங்காயமே இலங்கை முழுவதற்கும் ஏற்றுமதியானது.கூடவே செத்தல் மிளகாயும்.அந்தப் பொற்காலத்திலேயே வன்னி,யாழ்ப்பாண விவசாயிகள் லட்சாதிபதிகள் ஆகினர்.ஏழை விவசாயிகளின் குடிசை வீடுகள் கல்வீடுகளாயின. ஸ்ரீமாவோ அம்மையாரின் ஆட்சியில்தான் இது நடந்தது.அப்போது வரும் அரசியல் விருந்தினர்களுக்கு வெங்காய மாலை,மிளகாய் மாலை போட்டு விவசாயிகள் வரவேற்றனர்.
இன்று நிலைமை அப்படியல்ல.ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கம் திறந்த பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்தியதைத் தொடர்ந்தும்,மகாவலி அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாலும்,தொடர்ந்த யுத்தம்,பாதைபூட்டு என வந்த தடைகளாலும் அதிகளவில்  பாதிக்கப்பட்டது விவசாயிகள்தான்!இன்று கொழும்பிலுள்ள தமிழர்கள் சின்ன வெங்காயம் பயன்படுத்துவதில்லை.பதிலாக இறக்குமதியாகும் பம்பாய் வெங்காயமே பயன்படுத்துகின்றனர்.சின்ன வெங்காயம் யுத்த காலத்தில் வாங்க முடியாத பொருளாயிருந்தது. எனவே, அவர்கள் பம்பாய் வெங்காயத்துக்குப் பழக்கப்பட்டனர்.இன்று யாழ்ப்பாணத்தில் இருந்து சின்ன வெங்காயம் கொழும்பை அடையும் போதும் அவர்களால் அதை நாட முடியவில்லை.
ஆனால் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் சின்ன வெங்காயத்துக்குக் கிராக்கி உள்ளது. அதை மகாவலி பீ வலயம், புத்தளம் முதலான இடங்களில் விளையும் வெங்காயம் ஈடு செய்தது.ஆயினும் யாழ்ப்பாணத்தில் விளையும் வெங்காயத்தின் சுவையும்,நீண்ட காலத்துக்குப் பயன்படுத்தத்தக்க தன்மையும் காரணமாக அதற்கான கிராக்கி குறையவில்லை.எனவே,இங்குள்ள தோட்டங்களையும், வயல்களையும் மழைக்காலம் வரை வெங்காயமே ஆக்கிரமித்திருந்தது. அதனால் வெங்காயத்தின் விலையும் குறைந்திருந்தது.உள்ளுர்ச் சந்தைகளையல்ல தம்புள்ளவை நம்பியே அனேக விவசாயிகள் வெங்காயத்தை விதைத்தனர் என்பது முக்கியமானது.அது போலவே கரட்,பீற்றூட்,முள்ளங்கி,லீக்ஸ் என்பனவும் அதை நம்பியே பயிரிடப்படுகின்றன.தம்புள்ள வியாபாரிகளிடம் கடனுக்கு விற்றுக் காசிழந்த கதைகளும் இங்குண்டு.
இன்று உள்ளுர்ச் சந்தைகள் தம்புள்ள மரக்கறிகளையே எதிர்பார்த்திருக்கின்றன.தம்புள்ள மரக்கறிகள் வராவிட்டால் விலைகள் எகிறும்.வந்தால் இறங்கும்.கத்தரியும் தக்காளியும் விளையும் தோட்டங்களில் வெங்காயம் விளைந்ததன் விளைவு இது.போகிற போக்கைப் பார்த்தால் இங்கு விளையும் வெங்காயமும் தம்புள்ள போய் அங்கிருந்து சூடாக வரும் போலத்தான் நிலைமை இருக்கிறது.
விழிச்சான்குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 54

எல்லாத்திலையும் அரசியல் புகுந்து விளையாடுற காலமையா இது.செத்தவனை எழுப்பிறதைத் தவிர இந்த அரசியல் எல்லாத்தையும் செய்யும் பாருங்கோ!இந்த அரசியல் சுழியோட்டத்துக் குள்ளை எங்கை சுழி வந்து இழுக்கும் எண்டு தெரியாமல் எங்கடை உயரதிகாரிகள் திணறினை. அதை ஒரு நாடகமாய் உங்களிட்டைச் சமர்ப்பிக்கலாமெண்டு நினைக்கிறன்.இந்த நாடகத்திலை இரண்டு பாத்திரங்கள்.ஒருத்தர் மேலதிகாரி.மற்றவர் ஊழியர்.அப்ப நாடகத்தைப் பாப்பமே?
காட்சி ஒண்டு
அலுவலகத்துக்குள் ஊழியர் நுழைகிறார்.மேலதிகாரி எதையோ எழுதிக் கொண்டிருக்கிறார்.அவர் எழுதி முடிக்கவும் தொலைபேசி அலறுகிறது.எடுத்து ஐந்து நிமிடங்கள் கதைக்கிறார்.கதைக்கும் போது அடிக்கடி ஜெஸ் சேர்…நோ சேர்.. என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.ரெலிபோனை வைத்து விட்டு நிமிர்ந்து பார்க்கிறார்.என்ன என்பது போலச் சைகையால் கேட்கிறார்.
ஊழியர் : (பவ்வியமாக) ஐயா..வரச் சொல்லிக் கடிதம் அனுப்பியிருக்கிறியள்.அதுதான்..
மேலதிகாரி : என்ன விசயமாக…ஆ..விளங்குது.வாங்கோ..இப்பிடி உக்காருங்கோ (வெற்றிலை   கொடுத்து அழைக்காத குறையாக எழுந்து வரவேற்கிறார்.)
         எப்பிடி சுகமாய் இருக்கிறியளே..
ஊழியர்  : நல்ல சுகம் ஐயா! (என்ன இது சிடுமூஞ்சியாய் இருக்கிற இவர் கூலாய்க் கதைக்கிறார் என எண்ணிக் கொள்கிறார்)
மேலதிகாரி : (தயங்கியபடி) கேக்கிறன் எண்டு குறை நினைக்காதையுங்கோ.நீங்கள் ஆளுங்கட்சியிலையோஇ ஆளுங்கட்சித் தொழிற்சங்கத்திலையோ அங்கத்தவராய் இருக்கிறீங்களே?
ஊழியர் :  இல்லை ஐயா. எனக்குக் கட்சி அரசியலிலை நம்பிக்கையில்லை. தொழிற்சங் கத்திலையும் அங்கத்துவம் வகிக்கேல்லை.
மேலதிகாரி :  (நல்லதாப் போச்சுது என்று மனதுக்குள் சொல்லி விட்டு) அப்ப உங்கடை குடும்ப உறவினர் அல்லாட்டில் நண்பர்கள் ஆளுங் கட்சியிலை இருக்கினையே..
ஊழியர் : (இவருக்கு ஆரோ நான் கட்சிக்காரன் எண்டு முடிஞ்சு விட்டினை போலை என நினைத்தபடி) இல்லை ஐயா..ஏன் கேக்கிறியள்?
மேலதிகாரி : சும்மாதான்.எப்பிடி உமக்கு மினிஸ்ரியிலை செல்வாக்கு? ஆரேனும் வேலை செய்யினையோ?
ஊழியர் : சேச்சே..எனக்கு ஒருத்தரையும் தெரியாது.இதெல்லாம் எதுக்கு ஐயா?
மேலதிகாரி : கவணற்றை ஒவ்பிஸிலை ஆரையும் தெரியுமோ? பாராளுமன்ற உறுப்பினர்கள்இ பிரதேசசபை உறுப்பினர்கள்இபொலிஸிலை பெரியாக்கள் ஒருத்தரையுந் தெரியாதே?
ஊழியர் : இல்லை ஐயா..நானுண்டு.என்ரை சொலியுண்டு எண்டு திரியிற எனக்கு இவையையெல்லாந் தெரியாதையா
மேலதிகாரி : கடைசிக் கேள்வி.உமக்கு ஒரு ரான்ஸ்பர் வருகுது எண்டு வைச்சுக் கொள்ளுவம். அதை எப்பிடித் தடுத்து நிறுத்துவீர்?
ஊழியர் : நாங்கள் எப்பிடித் தடுக்கிறது.உங்களைப் போலை அதிகாரியளைத்தான் வந்து காலைப் பிடிச்சுக் கெஞ்ச வேணும்.
மேலதிகாரி (சற்றுக் கடுமையாக) உமக்கு வாற மாதம் முதலாந் திகதியிலையிருந்து வன்னிக்கு ரான்ஸ்பர்.கடிதம் வரும்.எந்த மறுப்பும் இல்லாமல் போக வேணும்.
ஊழியர் : ஐயா..தயவு செய்து கருணை காட்டுங்கள்.மனிசிக்குப் பெறுமாதம்.
மேலதிகாரி : கெற் அவுட் ஐசே..முடிவிலை எந்த மாற்றமும் இல்லை.போகத்தான் வேணும்.
       ஊழியர் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே வருகிறார்.ஏதாவது அரசியல் கட்சியிலை சேருவமோ என்று யோசிக்கிறார்.
       மேலதிகாரி வெற்றிக் களிப்புடன் தொலைபேசியைத் தூக்குகிறார்.
(யாவும் கற்பனையே.எவரையும் குறிப்பிடுவதல்ல.)
விழிச்சான்குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 53

நோர்வேக்காரன்ரை பெரிய அறிக்கை வந்திட்டுது.அதிலை தான் எவ்வளவுக்கு நல்ல பிள்ளையாய் இருந்தன்.இந்தப் புலியளும் அரசாங்கமும் சமாதானத்தை ஏற்படுத்திறதிலை எவ்வளத்துக்கு அக்கறை காட்டேல்லை. இரண்டு தரப்பும் பிடிச்சிறாவியாய் நிண்டதாலைதான் சமாதானம் குழம்பிச்சுது.இதுக்குப் பின்னாலை இந்தியாக்காரன் நிண்டு இரகசியமாய்ப் புலியளைச் சந்திச்சிட்டு, மற்றப் பக்கமாய் அரசாங்கத்துக்கு வைன் குடுத்துச் சண்டையை ஏவினது. இப்பிடிக் கன கதையளை அந்த அறிக்கை அவிட்டு விட்டிட்டுது.
இந்த அறிக்கை ஆகக் குறைஞ்சது 2009 மேயிலையாதல் வெளிவந்திருக்க வேணும்.மன்னார்க் கடலிலை தன்ரை பங்கு கிடைக்காதெண்டு தெரிஞ்ச பிறகுதான் இந்த அறிக்கை வருகுதோ தெரியேல்லை.இந்த அறிக்கையள் எங்களுக்கு ஏதாச்சும் விமோசனத்தை அளிக்குமெண்டால் நல்லது.இவை பலஸ்தீனத்திலை போய் வைறிவர் எக்கிறிமென்ட்டெல்லாம் செய்தும் அங்கையும் ஒரு பிரியோசனமும் ஏற்படேல்லைக் கண்டியளோ.இஞ்சையும் அதுதான் நடந்தது பாருங்கோ!
உள்ளத்தில் உண்மையொளி உண்டானால் வாக்கினிலே ஒளியுண்டாகும் எண்டு பாரதியார் பாடின பாட்டுத்தான் இப்ப ஞாபகத்துக்கு வருகுது.புலியளும் தாய்லாந்து,யப்பான்,நோர்வே எண்டு எல்லா இடமும் பேசிப் போட்டு வந்தும் சுமூகமாய்ப் பேச்சுக்கள் நடந்ததாய்த்தான் சொல்லிச்சினை. பேசின விசயங்கள் பெரிசாய் வெளிவிடேல்லை.அதாலை இண்டைக்கு புலியளை நோக்கிச் சுட்டுவிரல் நீட்டிறவைக்குப் பதில் சொல்ல முடியேல்லை.ஒரு உருத்திர குமாரன்தான் சர்வதேசத்தைக் குற்றஞ் சாட்டி ஒரு அறிக்கை வெளியிட்டார்.அந்தக் காலத்து றிச்சட் ஆமிரேச்சும் புலியள் தொடர்பான சர்வதேச அணுகுமுறை பிழையெண்டு சுடலைஞானம் பேசியிருக்கிறார்.இனி உதுகளைப் பேசிப் பிரியோசனம் என்ன? எங்கடை இந்த நிலைக்கு உலகமெல்லாம் காரணம் எண்டது எங்கடை சனத்துக்குத் தெரியும்.
இப்ப எங்கடை ஏக பிரதிநிதியள் எண்டு வெளிக்கிட்டிருக்கிற கூட்டமைப்பினர் அமெரிக்கா கூப்பிட்டுப் போட்டு வந்திருக்கினை.என்ன கதைச்சதெண்டால் நாங்கள் எங்கடை சனத்தின்ரை பிரச்சினையைச் சொல்லியிருக்கிறம்.அவை கேட்டிருக்கினை எண்டுதான் சொல்லியிருக்கினை. எங்கடை பிரச்சினையள் எல்லாத்தையும் ஒண்டும் விடாமல் இங்கையிருக்கிற அமெரிக்கன் எம்பசி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பிக் கொண்டிருக்குது.அதை வழி மறிச்சு மோப்பம் விட்டு விக்கிலீக்ஸ்  வெளிவிடுகுது.போதாததுக்கு யாழ்ப்பாணத்திலையும் ஒரு அமெரிக்கன் கோணர் திறக்கப்பட்டிருக்குது.இஞ்சத்தை விசியங்கள் ஒண்டும் அவையின்ரை பார்வையிலை தப்பாது பாருங்கோ!
இடைக்கிடை சம்மந்தர் ஐயாவைக் கூப்பிட்டும் கதைக்கினை. வாற போற நேரத்திலையும் வெளிநாட்டாக்கள் இவையைச் சந்திச்சுத்தான் போகினை.எங்கடை பிரச்சினையளை அமெரிக்காவுக்குப் போய்த்தான் காதுக்கை சொல்ல வேணுமெண்டில்லை. சரி, அமெரிக்கா அழைச்சிட்டுது.பெரிய மனிசன் உங்களை விருந்துக்கு அழைச்சிருக்கிறான்.போய் விருந்துண்டு கதைச்சிட்டு வந்திருக்கிறியள்.அங்கை கதைச்ச விசியங்களைப் பூசி மெழுகாமல் சனத்துக்குச் சொல்ல வேணும் கண்டியளோ! ஏனெண்டால் நாங்கள்தான் உங்களை எங்கடை சார்பாய்ப் பேசக்கூடியவை எண்டு கருதிப் பாளிமென்டுக்கு அனுப்பி வைச்சிருக்கிறம்.அந்தப் பாத்திரத்தைப் பழுதாக்கிப் போடாதையுங்கோ.
வெளியிலை பெலத்துச் சொன்னால் சிங்களக் கடும்போக்காளர்கள் உங்களுக்கு சிறைத்தண்டனை வழங்கச் சொல்லிக் கூக்குரலிடுவினை எண்டு பயந்தால் ஊடகங்களுக்குச் சொல்லாமல் விடுங்கோ.ஆனால் உங்களை உச்சாணிக் கொப்பிலை ஏத்தி வைச்ச சனங்களை, உங்கடை கூட்டுக்கட்சி ஆதரவாளர்களைச் சந்திச்சாவது பேச்சின்ரை சாதக பாதகங்களைச் சொல்ல வேணும்.புலியள் தரப்பு நியாயங்கள் மூடுமந்திரமாய் இருந்ததாலை வெளிச்சனத்துக்கு கடைசி வரை ஒண்டும் விளங்கேல்லை. அதுபோலை நாளைக்கு என்ன நடந்தாலும் சனத்துக்கு ஒண்டுந் தெரியாமல் போயிடும்.அரசாங்கத்துக்கும் நல்ல வாய்ப்பாப் போகும்.
ஊரான் பேச்சைக் கேக்கிறவன் தன் பெண்டில் பிள்ளையின்ரை பேச்சைக் கேக்க மாட்டானாம். நீங்களும் அப்பிடியிருக்க மாட்டியள் எண்டு நம்புறம்.
விழிச்சான் குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 52

முந்தி ஒருத்தர் இறந்தால் மற்றவைக்குத் தகவல் சொல்ல என்ன செய்வினை? வீடு வீடாகச் சென்று இன்னார் தவறி விட்டார் எண்டு கூறி,எத்தனை மணிக்கு சவம் எடுக்கிறது எண்டு இழவு அறிவிப்பினை.இழவு சொல்ல வருபவரிடம் ஆர் இறந்தது எண்ட விபரமெல்லாத்தையும் சனங்கள் பெற்றிடுவினை.இழவு வீட்டுக்காரரும் ஆராருக்குச் சொல்லப்பட்டது எண்டதை உறுதிப் படுத்துவினை.
இண்டைக்குக் காலம் மாறீட்டுது கண்டியயோ! இழவு சொல்லி அனுப்ப ஊரிலை ஆக்களில்லை. பெடி பெட்டையளுக்கு ஊராக்களைத் தெரியாது.அவ்வளவுக்கு ஊரிலை ஒட்டுறவில்லை. ஒருக்கா இழவு சொல்லிப் போட்டு வாடா எண்டால் எங்கடை பிள்ளையளுக்கு வெக்கமாம்.எனவேதான் இப்ப ஒலிபெருக்கியளிலை மரண அறிவித்தலுகள் அறிவிக்கிறதன் மூலம் இழவு சொல்லப்படுகுது.
ஒரு காரிலையோ, ஓட்டோவிலையோ ஒலிபெருக்கியைக் கட்டி இயக்க காலத்திலை போடுற சோக இசையைப் போட்டுக் கொண்டு இடையிடையே மரண அறிவித்தலைச் சொல்லுவினை. சனங்களுக்கு நூறு சோலி பாருங்கோ!அதனாலை கேட்டது பாதி கேக்காதது பாதி எண்டு கவனிக்காமல் விட்டிடுங்கள்.செத்த வீடெல்லாம் முடிஞ்சாப் பிறகுதான் எட இவரே செத்தது எண்டு முழிப்பினை.
இப்பிடித்தான் ஒரு செத்தவீடு நடந்துது.மரண அறிவித்தல் ஒலிபெருக்கியிலை அறிவிச்சினை. ஒரு லொறி முதலாளியும் அதைக் கேட்டார்.ஆரோ செத்திட்டினை என்று நினைச்சுக் கொண்டு போயிட்டார்.மரண அறிவித்தலிலை ஆர் செத்தது எண்டதை இவராலை விளங்கிக் கொள்ள முடியேல்லை.செத்தவர் இவற்றை லொறிச் சாரதி.நல்லாய் இருந்தவர் திடீர் காய்ச்சலிலை இறந்திட்டார்.அவற்றை சொந்தப் பெயர் புழக்கத்திலை இல்லை.பட்டப் பெயரைச் சொன்னால்தான் எல்லாருக்கும் தெரியும்.அடுத்த ஒழுங்கையிலை இருந்த லொறிச் சாரதியின்ரை செத்த வீட்டிலை முதலாளி இல்லை.அடுத்த நாள்தான் முதலாளிக்குத் தெரிஞ்சு சாவீட்டுக்குப் போனார்.நிண்டு நடத்த வேண்டியவரே சரியாகச் செய்தி செல்லாததாலை இதிலை கலந்து கொள்ளேல்லை.
கனபேர் எனக்குத் தெரியாது எண்டு சாட்டுச் சொல்லி செத்தவீட்டுக்கு வராமல் விடுறதுக்கும் இத்தகைய அறிவித்தலுகள் வழி செய்து விடும்.அந்தக் காலத்திலை யாழ்ப்பாணத்தின்ரை ஒரு ஊரிலை ஒரு உடையார் இருந்தவராம்.அவர் செத்த வீடுகளுக்குப் போறதில்லை.அதுக்குப் பதிலாக அவருடைய சேவகன் ஒரு பொல்லுத்தடியைக் கொண்டு சென்று சாவீட்டில் கொடுப்பாராம்.உடையார் சார்பாக அந்தப் பொல்லுத்தான் செத்தவீட்டுக்கு வந்துள்ளது எண்டு அர்த்தம்.ஒருநாள் உடையாரின்ரை பெஞ்சாதி கண்ணை மூடீட்டார்.ஊர்ச்சனங்கள் எல்லாம் பெரும் பெரும் பொல்லுகளை வெட்டி தமது சார்பாக உடையார் வீட்டுக்கு அனுப்பி வைச்சினை. உடையார் பெஞ்சாதியின்ரை சவத்தைத் தூக்கக் கூட ஆக்களில்லை.ஆனால் எரிக்க நிறைய விறகு இருந்துது. இந்த மாதிரி நிலைமையள்தான் எதிர்காலத்திலை இஞ்சையும் நடக்கப் போகுது பாருங்கோ.
இழவு எண்டது துக்கம் பகிருறதுக்கான சந்தர்ப்பம் மட்டுமில்லை ஒருத்தருக்கொருத்தர் உதவிறதும் கூட.செத்தவர் செத்திட்டார்.ஆனா உதவிறதுக்கு நாங்கள் இருக்கிறம் எண்டு குடும்பத்தாருக்குத் தெம்பு குடுக்கிற சந்தர்ப்பம் அது.அதனாலைதான் கலியாண வீட்டைத் தவிர்த்தாலும் செத்த வீட்டைத் தவிர்க்கப் பலரும் விரும்புறதில்லை.ஒரு காகம் இறந்தால் நூற்றுக் கணக்கான காகங்கள் ஒன்று கூடி அழும்.மனிசர்களுக்கும் அந்த நிலை தொடர வேணும். எனவே, உங்களைக் கையெடுத்துக் கும்பிடுறன் இழவை இழவாக அறிவியுங்கோ!
விழிச்சான்குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 51

“ஒண்ணுமே புரியலை உலகத்திலை.என்னவோ நடக்குது.மர்மமாய் இருக்குது.” என்றொரு பழைய சினிமாப்பாடல்.ஜே.பி.சந்திரபாபு பாடியிருக்க வேணும்.இஞ்சை இப்ப நடக்கிற நிகழ்ச்சியளைப் பாக்கேக்கை பெருங்குரலிலை இந்தப் பாட்டைப் பாடவேணும் போலையிருக்குது.என்னென்னவோ கதையள் எல்லாம் வந்து போகுது.என்ரை வாழ்நாளிலை காணாத,கேக்காத கதையளை எல்லாம் இப்ப கேக்க வேண்டிக் கிடக்குது பாருங்கோ.
ஆசுபத்திரிப் பக்கம் போய்ப் பாருங்கோ.போய் ஒவ்வொரு கட்டிலாய் இருக்கிற ஆக்களை விசாரிச்சுப் பாருங்கோ.கன இளசுகள் தங்களை அழிக்கிறதுக்கு வெளிக்கிட்டுதுகள் எண்ட உண்மை தெரியும்.நோயோ நொடியோ கடவுள் தந்த வாழ்க்கையை நிறைவு செய்திட்டுப் போக வேணும் எண்டு கிழடுகட்டையள் நம்பிக்கையோடை வாழுதுகள்.இந்தப் பொடி பொடிச்சியள் எல்லாம் வேண்டாம் வாழ்க்கை எண்டு துணிஞ்சு, தாங்களும் கஸ்டப்பட்டு,மற்றவையையும் கஸ்டப் படுத்தி இப்பிடி ஆசுபத்திரிப் படியேறுதுகள்.விசாரிச்சுப் பாத்தால் அற்ப விசியங்களுக்கெல்லாம் சண்டை போட்டுக் கொண்டு இப்பிடிச் செய்திருக்குதுகள்.
இன்னொரு பக்கம் பாத்தியள் எண்டால் இளம் பொடியள் கைகால் முறிஞ்சு போய் கட்டில்லை கிடக்குதுகள்.தலைதெறிக்கிற வேகத்திலை மோட்டார் சைக்கிள்ளை ஓடித்தான் இப்பிடி நடந்திருக்குது.இவை கிடக்கிறது ஒரு பக்கம்.இவையாலை இடிபட்டுச் சிவலோகம் போனவையும், கைகால் முறிஞ்சு கர்மவினையெண்டு அழுது கொண்டு இருக்கிறவையும் மற்றப் பக்கம். இவைக்காக வேலை வெட்டி எல்லாத்தையும் விட்டிட்டு அலையிற தாய் தேப்பன் இன்னொரு பக்கம்.
இந்தச் சீனுகள் எல்லாம் வெளிப்படையாக ஓடிக் கொண்டிருக்க, எங்கடை பள்ளிப் பருவப் பிள்ளையளின்ரை அவசர ஆசையளாலை வந்த வில்லங்கங்களும் பெரிசா உள்ளுக்கை ஓடிக்கொண்டு இருக்குது. அண்மையிலை ஒரு சிறுவர் தின விழாவிலை பேசேக்கை 253 சிறார் கருத்தரித்தல் (வுநநயெபந pசநபநெnஉல)இடம்பெற்றிருக்குதெண்டு எங்கடை ஜீஏ அம்மா ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.இண்டைக்கு எல்லாப் பாதுகாப்பு வழிமுறையளும் இருக்கிற நிலையிலையே இப்பிடியெண்டால் சந்திக்கு வராமல் மறைஞ்சு கிடக்கிறது கனக்க எண்டே சொல்ல வேணும்.
இதுகள் எல்லாத்துக்கும் சிகரம் வைச்சாற் போலை கஞ்சா,அபின் எண்ட நிலைமை மாறி ஹெரோயின் பாவிக்கிற வசதியோடை எங்கடை இளசுகள் சீரழியுதுகள் எண்டது நெஞ்சை அடைக்கிற செய்தி பாருங்கோ.கொழும்புப் பக்கம் குடு அடிச்சுப் போட்டு நிக்கிறவங்கள்தான் வழிப்பறி,கொள்ளை,கொலை செய்யிற ஆசாமியள்.அவங்கள்தான் பாதாள உலகக் கோஸ்டி. ஜெயிலுக்குப் போயும் குடு -அதுதான் ஹெரோயின் போதைவஸ்துத் தூள்- அடிக்கேலாமல் அந்தரப்பட்டு,வீட்டுக்காரர் சாப்பாட்டோடை கொண்டு வந்து குடுத்துப் பிடிபடுகுதுகள்.பிறகு ஜெயிலிலை வேலை செய்கிற அதிகாரியளே வாங்கிக் குடுத்துப் பிடிபட்டிருக்கிறாங்கள்.
இஞ்சையும் பாருங்கோ சின்ன வயசிலை தண்ணியடிக்க வெளிக்கிட்டவனை.கலியாணம் காட்சியுமில்லாமல் குடிக்கிறதும்,ஆரிட்டையும் கையேந்திறதும் எண்டு அவனுடைய வாழ்க்கை கழிஞ்சு கடைசியிலை அரை வயசிலை போய்ச் சேந்திடுறான்.மதுவே இப்பிடியெண்டால் இந்தப் போதைப் பொருள் பாவனை எப்பிடியெல்லாம் கொண்டு போய் விடும் தெரியுமே!
 எனக்கு இந்த இடத்திலை தமிழ்நாட்டின்ரை பேராசிரியர் வீ.அரசு சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகுது. அசாம்,திரிபுரா,மேகாலயா எண்டு பழங்குடியின மக்கள் வாழுற பகுதியளிலை போராட்டங்கள் எழும்பக் கூடாதெண்டு இந்திய அரசாங்கம் போதைவஸ்துப் பாவனையை ஊக்குவிக்குதாம் எண்டு அவர் சொன்னார். நோயாளிகள் நிறைஞ்சிருக்கிற சமூகம் ஒருநாளும் நிமிரேலாது கண்டியளோ!
எங்கடை இளசுகள் தண்ணியடிக்க எங்களுக்கெலாம் ஏன் சோலி எண்டு விலகிப்  போறீங்களல்லோ.அங்கைதான் நீங்கள் பிழை விடுறியள்.அது உங்கடை வாசல் படி வரும் வரைக்கும் நீங்கள் பாத்துக் கொண்டிருந்து போட்டுப் பிறகு புலம்பிறதிலை அர்த்தமில்லைக் கண்டியளோ! அதுதான் இண்டைக்கு இளசுகள் போதைப்பொருள் பாவிச்சுப் பிடிபடக் காரணமாய் இருந்திட்டுது எண்டதை மறந்திடாதேங்கோ.
இதைவிட அனாமதேயக் கொலையளும் கூடீட்டுது.பல இடங்களிலையும் சடலங்கள் மீட்கப்பட்டுக் கொண்டிருக்குது.மனைவியைக் கொலை செய்தவங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கினை. செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர் ஒருவரும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.போதாததுக்கு இப்ப பாடசாலை அதிபரொருத்தரும் கோரமாகக் கொலையுண்டிருக்கிறார்.சூத்திரதாரிகள் யாரோ தெரியாது.அதுக்குள்ளை பல்வேறு திசைதிருப்பல்களிலை பொலிசார் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ் சாட்டப்படுகுது.
இதையெல்லாம் கேக்கும் போது ஒண்ணுமே புரியலை உலகத்திலை… எண்டு பாடத்தான் வேணும்.பாடி என்ன பிரயோசனம்?பூனைக்கு மணி கட்டிறது ஆர் பாருங்கோ? ஆனால்…கட்டாட்டால் கஷ்டமும் நமக்குத்தான் பாருங்கோ!
விழிச்சான்குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 50

ஒரு கலியாண எழுத்து வீடு.எழுத்து வீடெண்டால் ரை கட்டி ரிப்ரொப்பாகத்தானே போக வேணும் பாருங்கோ.அப்பிடித்தான் நானும் போனன்.அங்கை பாத்தா மாப்பிளைப் பெடியன் ரை கட்டாமல் நிக்குது. உங்கை கண்டது கடியதெல்லாம் மாப்பிளைக் கோலத்திலை ரை கட்டேக்கை கவுண்மேந்து உத்தியோகம் பாக்கிற இவன் ரை கட்டாமல் நிக்கிறானே எண்டு மனதுக்குள்ளை ஒரே குடைச்சல்.கிட்டப் போய் “ஏன் மோனை ரை கட்டாமல் நிக்கிறாய்?” எண்டு கேட்டன்.
அதற்கு அவன் “ஐயா!இப்ப ஒரு புது மரபுத்தொடர் புழக்கத்திலை இருக்குது தெரியுமோ?” எண்டு எதிர்க் கேள்வி கேட்டான். “மனுசார எனக்குத் தெரியாது மோனை.சொல்லு பாப்பம்” எண்டன். அதற்கு அவன் “ரை கட்டிக் கை கட்டி” என்று பதிலிறுத்தான்.இதென்னடா புதுக்கதை கதைக்கிறான் எண்டு வியப்போடை நான் அவனைப் பாத்தன். “ரை கட்டினாலே கூனிக் குறுகி ஆராரிட்டையோவெல்லாம் கை கட்டி நிக்க வேணும்.மீசை நரைச்ச எங்கடை அதிகாரியள் எல்லாம் இப்பிடி ரைகட்டிக் கை கட்டிக் கூனிக் குறுகி நிக்கிறதைப் பாத்ததாலை ரையே வெறுத்துப் போச்சு ஐயா” எண்டு அவன் சொன்னபோதுதான் ஒரு பெரிய உண்மை உறைச்சுது.
இப்பவெல்லாம் அரசியல்வாதிகளிடமும்,மேலதிகாரிகளிடமும் உயர் அதிகாரிகள் எனப்படுவோர் வாங்கிக் கட்டிக் கொள்வதை கிளறிக்கல் லெவலிலை இருக்கிற இவன் போன்றவர்கள் கண்டு கேட்டு வரேக்கை வேண்டாம் பதவியுயர்வு…வேண்டாம் ரை எண்ட மனநிலை வருந்தான் பாருங்கோ!
ஒரு பக்கம் பாத்தா 60 வயசிலை பென்சன் குடுக்குறது காணும் ராசா.அடுத்தவனுக்கு வழி விடு எண்டதுக்குத்தானே!அதை விட்டிட்டு சேவை நீடிப்பெண்டு இவை நந்தி மாதிரிக் குந்திக் கொண்டிருந்தால் எப்பிடி இளசுகள் முன்னுக்கு வரும்? இளம் பிள்ளையளிட்டை புத்தாக்கச் சிந்தனையள் இருக்குது.உற்சாகமாகத் தொழிற்படுவாங்கள்.எல்லாத்துக்கும் ஓணான் மாதிரித் தலையாட்ட மாட்டாங்கள்.
இன்னொரு பக்கத்திலை அதிகாரத்துக்குச் சரியாகத் தலையாட்டக் கூடிய ஆக்கள் இருந்தாத்தானே காரியங்களைச் சுலபமாய் முடிக்கலாம்.அப்பிடியில்லாமல் நடந்து கொண்ட பெருந்தலையள் பல அன்மைக் காலத்திலை உருட்டப்பட்டிருக்கிறது செய்தியாய் வந்தது உங்களுக்கெல்லாம் தெரிஞ்சதுதானே! என்ன இருந்தாலும் சிவில் நிர்வாகத்துக்குள்ளை அரசியல் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கக்  கூடாது கண்டியளோ! நிர்வாகம் நடத்திறவை பிழை விட்டால், அதைப் பற்றிச் சனங்கள் ஏதேனும் சொன்னால் மட்டும், மக்களாலை தெரிவு செய்யப்பட்டவை எண்டோ, அரசாங்க அமைச்சரவைப் பிரதிநிதியள் எண்டோ நிர்வாகத்தைச் சீர்படுத்த நடவடிக்கை எடுக்கலாம்.அதுவும் உரிய சட்ட அடிப்படையிலையே செயற்பட வேணும்.
அதை விட்டிட்டு கட்சிக்கு வால் பிடிக்கிறவனுக்கும்,கூழைக் கும்பிடு போடுறவனுக்கும் பெரிய பதவியளைக் குடுத்தால் கொண்டு வந்த “தோண்டி|யைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்த நிலைதான் வரும்.நாளைக்கு அடுத்த கட்சிக்குத் தாவுவதும்,உதவியவரையே எட்டி உதைப்பதும் இவர்களாகவே இருக்கும்.
ஒரு காலத்தில் ரை கட்டி வேலை செய்பவர்கள் தொடர்பான சமூக மதிப்பீடு மிக உயர்வானது. வெள்ளைக்காரன்ரை நிர்வாகத்திலை கடைப்பிடிச்ச பல நல்ல விடயங்கள் இவர்களாலை பின்பற்றப்பட்டுது.தகுதியும், திறமையும், நற்பண்புகளும் மிக்கவர்களே உயர் பதவியளை அலங்கரிச்சினை.கறை படியாத கைகளோடை பென்சனும் எடுத்தினை.இண்டைக்கும் அந்த மாதிரி ஆக்கள் நிறைய இருக்கினைதான்.ஆனாலும் அரசியல் வந்து இந்த நிலமையை ஆட்டங் காண வைக்கிறதுதான் கவலையைத் தருகுது பாருங்கோ!
கேக்கிறவன் கேணையனாக இருந்தால் எருமைமாடு ஏரோபிளேன் ஓட்டுமாம் எண்டொரு பழமொழி தமிழ்நாட்டிலை சொல்லுவினை.சொல்லுறவன் சொன்னா கேக்கிறவனுக்கு மதியென்ன எண்டு இங்கை ஒரு பழமொழி உள்ளது.பல விசயங்களிலை இந்தப் பழமொழியள்தான் ஞாபகத்துக்கு வருகுது.பட்டம் பதவியள் பொருத்தமான மனிசரிட்டை இருக்கிறதுதான் நல்லது பாருங்கோ.
விழிச்சான்குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 49

ஆடுகளம் எண்டொரு படம் வந்துது.எங்கடை ஈழக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனும்,ரஜனியின்ரை மருமோன் தனுசும் நடிச்சு விருது பெற்ற படம்.அதிலை ஒரு காட்சி வரும்.கோழிச் சண்டைக்கு ஆயத்தப் படுத்திற வேளை பொலிஸ் வரும்.உடனே எல்லாரும் சேவல்களையும் தூக்கிக் கொண்டு ஓடுவினை.பொலிஸ் போனாப் பிறகு சேவல் சண்டை நடக்கும்.இதப் போலை ஒரு காட்சி எங்கடை இடமொண்டிலையும் நடந்தது.ரண்டு பேர் அடிபட்டுக் கொண்டு நிண்டாங்கள்.அதை வேடிக்கை பாத்துக் கொண்டு ஒரு கூட்டம் நிண்டது.திடீரெனப் பொலிஸ் வந்தது.எல்லாரும் விழுந்து கட்டிக் கொண்டு ஓடிப் போனாங்கள்.சண்டை நடந்த இடம் மூண்டு பார்கள்(டீயச) சங்கமிக்கும் இடம்.மதுவேணி சங்கமம் எண்டு சொல்லலாம்.அதனாலோ என்னவோ வந்த பொலிஸ் அதிலை நிக்கேல்லை.சுத்திப் பாக்கிற மாதிரிப் பாத்திட்டுப் போட்டுது.
அதுக்குப் பிறகு மீண்டும் சண்டை.கோழிச் சண்டை,குத்துச் சண்டை பாக்கிற ஆவலிலை இந்தச் சண்டையையும் ஒரு கூட்டம் சுவாரஸ்யமாய்ப் பாத்துக் கொண்டு நிண்டது.ஒருவன் அடித்த அடியிலை மற்றவனுக்கு மண்டை வெடித்து ரத்தம் பாயுது.கையெல்லாம் சிராய்ச்சு ரத்தம் வழியுது.ஆனாலும் அவன் அடிச்சுக் கொண்டேயிருந்தான்.அடிவாங்கியவன் கடுங் காயத்தோடை போராடிக் கொண்டிருக்க,சனங்கள் அவன் சாகப் போறதை வேடிக்கை பாக்க,இந்த நேரத்திலை ரண்டு பேர் வந்தாங்கள்.
வந்தவங்கள் அடி வாங்கினவனின் உறவினர்கள் போலை.அவங்கள் இருவரும் அடிச்சவனுக்கு அடிக்கத் தொடங்கினாங்கள்.ஒருவன் கையால் முகத்திலை ஓங்கிக் குத்த,முகத்திலையிருந்து ரத்தம் வழிந்தது.நிலை குலைஞ்ச அவன் அடிச்சவையிலையிருந்து விடுபட்டு ரத்தம் சொட்டச் சொட்ட ஓடினான்.இவங்களும் கலைச்சாங்கள்.அவன் உயிரைக் கையிலை பிடிச்சுக் கொண்டு ஓடினதாலை இவையாலை ஓட முடியேல்லை.பிறகு முதலிலை அடி வாங்கி நடக்கேலாமல் நிண்டவனைத் தூக்கிக் கொண்டு போனாங்கள் அவங்கள்.
இந்தச் சீன் தீபாவளியன்று திரையிலை அடிதடிப் படங்களை இளசுகள் பாத்துக் கொண்டிருக்கேக்கை வெளியிலை தண்ணியைப் போட்டிட்டு நிண்டதுகளாலை நிகழ்த்தப்பட்டது. இப்பிடிக் கன சீனுகள் தண்ணி வாக்கிற இடங்களிலை தினசரி நடக்குது.சில பார்க்காரர் அங்கை வைச்சுக் குடிக்க விடுறதில்லை.எனவே அங்கை போத்திலை வாங்கி ஒழுங்கையளுக்கை வச்சுத்தான் குடிக்க வேணும்.ஒழுங்கையும் கன வசதி பாருங்கோ.போற வாற இளம் பொடிச்சியளோடை நக்கல் நளினம் விடலாம்.ஒண்டுக்கு நிக்கலாம்.கொஞ்சம் மப்பேறினால் சண்டை பிடிக்கலாம்.பொலிசு கிலிசு வந்தால் ஓடித் தப்பலாம்.
முந்திக் காலத்திலை ஒண்டிரண்டு தலை தெறிச்சதுகளைத் தவிர கொஞ்சம் வயது போனதுகள்தான் தண்ணியடிக்கும்.அதுவும் கள்ளுத்தான்.இப்ப என்னடா எண்டால் எல்லாம் வெடிவால் முளைக்காத இளசுகள்தான் இப்பிடி ஒழுங்கையளுக்கை நிண்டு தண்ணியடிக்குதுகள். இதப் பாத்துக் கொண்டு பெரியாக்கள் எனக்கேன் சோலி என்று சென்று கொண்டிருப்பினை. ஆராவது தட்டிக் கேட்டால் கஷ்டந்தான்!
சிரித்திரன் சுந்தர் ஒரு கார்ட்டூன் வரைஞ்சிருந்தார்.அதிலை முதலாவது படத்திலை ஒரு பெடியன் மரத்துக்குப் பின்னாலை ஒளிஞ்சிருப்பான்.என்னடா ஒளிச்சிருக்கிறாய் எண்டு கேட்டதுக்கு என்ரை வாத்தியார் வாறார் எண்டு பெடியன் சொல்லுவான்.அடுத்த படத்திலை இன்னொரு பெரியாள் மரத்துக்குப் பின்னாலை ஒளிச்சிருப்பார்.என்ன வாத்தியார் மரத்துக்குப் பின்னாலை எண்டு  கேட்டதுக்கு அவர் சத்தம் போடாதையும்.என்ரை மாணவன் வாறான் என்பார்.முந்திய, பிந்திய தலைமுறை மாற்றத்தை அவர் இப்பிடி வெளிப்படுத்தியிருந்தார்.
நடக்கிறதுகளைப் பாத்தால் சுந்தர் ஐயா தீர்க்கதரிசியைப் போலத்தான் தெரியிறார்.வாத்தியார் மட்டுமில்லை சமூகத்திலை பெரியவை எண்டு இருக்கிற எல்லாருமே வெறுமனே கோசம் போட்டுக் கொண்டும்,நடக்கிற சம்பவங்களைக் கண்டும் காணாமலும் இருக்கினை.கடைசியிலை ஆறு போவதே போக்கு.அரசன் சொல்வதே தீர்ப்பு எண்ட கணக்கிலை இவங்கள் தான்தோன்றித் தனமாகச் செயற்பட நாங்களே காலாக இருந்திடுவம் கண்டியளோ!
விழிச்சான்குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 48

vdf;Ff; fdfhykha; xU re;Njfk;.ehq;fSk; gbr;R cj;jpNahfj;jpiy Nru;e;J ngd;rDk; vLj;jpl;lk;.ehq;fs; fd tpraq;fisg; gbr;rpl;lk;.Mdh guPl;irapiy Nfl;fpw Nfs;tpf;Fk; vq;fil tho;f;iff;Fk; VjhtJ rk;ge;jk; ,Ue;JNjh? me;jf; Nfs;tp vq;fil jpwd;fis tsu;f;f> Gjpa tpraq;fisj; Njl VjhtJ top fhl;bapUf;FNjh vz;L ehDk; fdehsha; epidr;Rg; ghf;fpwd;.xz;LNk Gyg;gLFjpy;iy.
fd gps;isaSk; ,e;jf; Nfs;tpaisg; ghu;j;jpl;Lf; Fok;gpabr;rJjhd; kpr;rk;.ehq;fSk; ngUk; ngUk; Gj;jfq;fisnay;yhk; thrpr;R> kdg;ghlk; gz;z itj;J guPl;iria vOj itj;jk;.fd gps;isas; tho;f;if ntWj;Jg; Ngha; gbg;Gf;Nf KOf;Fg; Nghl;lJ ,e;jg; guPl;irfshiyjhNd! Mdh ehq;fs; Njitapy;yhkNyh Mj;jhkNyhjhd; ,g;gpbf; Fok;gpwk; vz;L epidr;rd;.,g;gjhd; njupAJ vq;fil Fog;gKk; rupnaz;L.
mz;ikapiy fz;bapiy xU guprspg;G tpohtpiy vq;fil guPl;ir Mizahsu; ehafk; mDu vjpuprpq;f NgrpapUf;fpwhu;.mtu; nrhy;fpwhu; cyfj;jpiyNa kpff; fLikahd guPl;ir Kiwik vq;fil ehl;biy kl;Le;jhd; ,Uf;Fjhk;. Mgpupf;f Nfhj;jpu r%fq;fisj; jtpu cyfpiy vq;fil Nghy fLikahd guPl;ir Kiw Ntiw vq;ifAk; fpilahjhk;.guPl;ir vz;lJ khztu;fspd; Mw;wiy kjpg;gPL nra;apwJf;fhd xU nghwpKiwjhd;.Mdhy; ehl;biy eilKiwapiy ,Uf;fpw guPl;ir Kiwahiy vtUf;Fk; ed;ikapy;iy vz;Lk; me;jhs; nrhy;ypapUf;FJ.mNjil ehl;biy ,Uf;fpw xl;Lnkhj;jg; guPl;ir KiwapiyAk; khw;wk; nfhz;L tu NtZk; vz;Lk; typAWj;jp ,Uf;fpwhu;.
Muk;gj;jpiy Mrpupau; ikaf; fy;tp vz;bUe;J gpwF khztu; ikaf; fy;tp vz;lhu;fs;. ,g;g Nju;r;rp jOtpa khztu; ikaf; fy;tpahk;! Mdh ,ij ahUk; fz;L nfhs;Swjpy;iy. guPl;iria Nehf;fpj;jhd; vy;yhr; nraw;ghLfSk; KLf;fp tplg;gLFJ. ngupa gug;gpiy vd;ndd;d Nfs;tp tUk; vz;L gps;isas; mq;fyha;f;f Ntz;bapUf;FJ. mq;fyha;f;fpw rdk; rhj;jpuf;fhud;fisj; Njb miyapwJ Nghiy gps;isaSk; upA+l;lwpfisAk;>tpdhtpilg; Gj;jfq;fisAk; Njb miyQ;R mitaisf; nfhSf;fg; gz;zpj; jhq;fSk; rhe;jp milAJfs;.
Nkw;F ehLfspiy gps;isaSf;Ff; fy;tpiaj; jpzpf;fpwjpy;iy. gs;spf;$lk; tpLKiw tpl;lhy; tPl;LNtiy FLf;fpwjpy;iy. mTl;bq; Ngha; vd;N[ha; gz;zPl;L thq;Nfh vz;Ljhd; nrhy;Ytpid.ntspr;Rw;Wyh vz;lJ gps;isapd;iu mDgtg; gug;ig tpupthf;fp>cseyj;ij Nkk;gLj;Jk; vz;lJ nts;isf; fhuDf;Fj; njupAk;.ehq;fs; vg;gpb vq;fil gQ;rhq;fg; gbg;ig khj;jpwJ? yz;ldpiy ,Uf;fpw vd;iu Nkhs; nrhy;Ywhs; mq;if gbg;Gr; rupapy;iyahk;.mq;ifAk; mts;ghtp gps;isais tpl;L itf;Nfy;iy. mk;gJ gTz; xU kzpj;jpahyj;Jf;Ff; FLj;J tPl;biy upA+rd; nrhy;Ytpf;fpwhs;.vq;if NghdhYk; vq;fil kdepiy khwhJ ghUq;Nfh!
,Q;ir ,t;tsT fLikahfg; guPl;iria itr;R> cg;Gr; rg;gpy;yhj Nfs;tpaisg; Nghl;L filrpapiy gl;lk; ngw;wJfs; vkf;F murhq;fk; Ntiy juhl;lhy; cz;zhtpujk; ,Ug;gk; vd;W vr;rupf;if nra;apw Jzpitj;jhNd ,J je;jpUf;FJ. guPl;ir Mizahsu; ehafj;jpd;iu ,d;ndhU fUj;Jk; Kf;fpakhdJ ghUq;Nfh. rpy guPl;ir tpdhj;jhs;fSf;F khztu;fshiy kl;Lkpy;iy mjidj; jahupj;j Nguhrpupau;fshiyAk; tpilnaOj KbahJ vz;Lk; mtu; nrhy;ypapUf;fpwhu;. vg;gpbnay;yhk; ,bag;gr; rpf;fy; tpdhf;fisg; gps;isaSf;Ff; FLj;Jf; Fog;gpdk; ghUq;Nfh!
,g;g Gyikg; guprpy; fha;r;ry; KbQ;R f.ngh.j.rhjhuz juf; fha;r;ry; njhlq;fPl;LJ. guPl;irj; jpizf;fsk; xU gapw;rpg; guPl;iria itj;Jg; gpd;D}l;ly; nra;AJ. Nghjhjjw;F khfhzKk;> tyaq;fSk; gapw;rpg; guPl;irais itf;FJ. mij tpl Nygypiy thOw fd mikg;Gf;fSk;> tpsk;gue; NjLfpw epWtdq;fSk; r%fj;Jf;F mtrpakhd vt;tsNth Njitaisr; nra;ahky; tpl;bl;L ,g;gpbg; guPl;irfs; topfhl;ly; tFg;Gf;fis elj;Jfpid.fy;tpj; jpizf;fs mjpfhupfSk; Nfhtpy;fhisfs; Nghiy vLj;jJf;nfy;yhk; jiyahl;bf; nfhz;bUf;fpid.
gps;isas; Rakha;g; gbf;f topapy;iy.gbr;rJfisAk; topfhl;ly; tFg;gpiy Fk;gy;iy Nfhtpe;jhthf khj;jp khj;jpr; nrhy;yp the;jpnaLf;fr; nra;J NghLtpid.,ij ehd; nrhy;Nyy;iy.gps;isaSk;>ngw;NwhUk; nrhy;Yfpid.aho;g;ghzj;jpd;iu fy;tpia msTf;F kpQ;rpd mkpu;jj;ijf; FLj;Jr; rPu;Fiyf;f ahUk; fq;fzk; fl;b epf;fpidNah vz;L re;Njfg;gl Ntz;bf; fplf;FJ. Mz;ltNu! vq;fs; gps;isaisf; fhg;ghw;WtPuhf!
tpopr;rhd;FQ;R

வியளம் கேட்டீர்களா? 47

விழிச்சான்குஞ்சு ஒரு வியளம்.. என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.வழியில் கந்தையா எதிர்ப்பட்டான்.எல்லாம் கலி காலமாய்ப் போச்சுது என்று சலித்துக் கொண்டான்.கிழவன் வாயைத் திறந்தாலும் குரல் வராது.மிதிச்ச இடத்துப் புல்லுஞ் சாகாது.எங்கடை சனம் கஸ்ரப்படுகுதுகள். உங்களைப் போலை அதுகளையும் சமமாக நடத்துங்கோ எண்டுதான் ஆட்சியாளரிட்டை கத்திக் கத்திக் கேட்டது. அதுவும் சரி வராதென்டு நம்பினாப் பிறகு தமிழரைக் கடவுள்தான் காப்பாத்த வேணும் எண்டு சொல்லிப் போட்டுக் கண்ணை மூடீட்டுது.அந்த மனிசன்ரை சிலையை உடைக்கிறாங்களே. சிலையை உடைக்கிற மாதிரி உங்களையும் உடைப்பம் எண்டு சொல்லுறாங்களோ? என அவன் ஆதங்கப்பட்டான்.
உண்மைதான்!அந்த மனிசன் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் வெள்ளைக்காரன் குடுத்திட்டுப் போன சுதந்திரத்தை எல்லாரும் சமமாக அனுபவிக்க வேணும் எண்டதுக்காகப் பாடுபட்டுது.அதிலும் சிங்களவரோடை சேர்ந்து கதைச்சுப் பேசி எதையெண்டாலும் பெறுவமெண்டு வெளிக்கிட்டுது. பாளிமன்டிலை எங்கடை மக்களின்ரை பிரச்சினையளை எடுத்துச் சொல்லுறதும், அரசாங்கத் தலைவர்களோடை பேசிறதும் எண்டு அந்தாளின்ரை வாழ்நாளே கழிஞ்சு போச்சுது. தன்ரை அற்வகேற் தொழிலை விட சனத்தின்ரை பிரச்சினையளைப் பெரிசா நினைச்சு, அந்தப் பிரச்சினையளை அரசாங்கத்தோடை பேசித் தீர்ப்பம் எண்டு நம்பிச்சுது.
மனிசன் பேசிப் பேசிச் சும்மா இருக்கேல்லை.இரண்டு தரம் பண்டாரநாயக்கவுடனும், டட்லி சேனநாயக்கவுடனும் ஒப்பந்தங்களையும் செய்திச்சுது.ஒப்பந்தக் காகிதங்களை அவையள் கப்பல் செய்து விளையாடினதுக்கு அவர் என்ன செய்யிறது? சாக முதல் ஓங்கி ஒரு தீர்மானத்தையும் எடுத்துப் பார்த்துது.அதுதான் வட்டுக் கோட்டைத் தீர்மானம்.தமிழீழமே தமிழருக்கான நிரந்தரத் தீர்வு எண்டு உறுதியாகச் சொல்லிப் பார்த்துது.ஒண்டுக்கும் மசியாத பேரினவாதத்தைக் கண்டிட்டு கடைசியாய் தமிழர்களைக் கடவுள்தான் காப்பாத்த வேணும் எண்டு சொல்லிப் போட்டுக் கண்ணை மூடீட்டுது.
நாங்களும் வந்த கடவுளர் ஒவ்வொருவராய் தீர்வு வரும் எண்டு தேடிக் கொண்டிருக்கிறம்.இந்திரா காந்தி நிறையத் தருவா எண்டு எதிர்பார்த்தம்.இடையிலை அவ போயிட்டா.அவவின்ரை மகன் தருவார் எண்டு பார்த்தம்.அவர் ஒன்றை எதிர்பார்க்க இன்னொன்றைத் தந்து விட்டு அவரும் போட்டார்.பிறகும் கன பேர் வந்தினை.வில்லங்கத்தைத் தந்து போட்டு நல்ல பிள்ளைக்கு நடிக்கிற இங்கிலாந்து வந்துது.அமெரிக்காவின் சமாதான முகமாயிருக்கிற நோர்வே வந்துது.யப்பான் வந்துது.வந்த எல்லா வெள்ளங்களும் நிண்ட வெள்ளத்தையே அடிச்சுக் கொண்டு போனதுதான் மிச்சம்.
இப்ப உலகத்தின்ரை பொலிசுக்காரன் ஏதாவது தருவானோ எனக் காக்க வேண்டியிருக்குது. பேசப் போட்டாங்கள் எண்டவுடனை என்ன செய்யிறதெண்ட வெப்பியாரத்திலை கிழவன்ரை தலையை வெட்டிப் போட்டிட்டாங்கள். அந்த மனிசன்ர சிலைக்கே உந்தக் கதியெண்டால் மற்றவைக்கு என்னவும் நடக்கலாந்தானே!கந்தையா சொன்னது சரிதான்!
எங்கடை செல்வநாயகத்தாற்றை சிலையையல்லே உடைச்சிட்டாங்களாம் எண்டு சிவத்தார் சொன்னவுடனையே அதிர்ந்து போனம்.கடையிலை இதப் பற்றிக் கதைச்சுக் கொண்டு நிக்கேக்கை காதுக்குள்ளை கெட்போனை வைத்துக் கதைத்துக் கொண்டிருந்த ஒரு விடலை யாரையா செல்வநாயகம் எண்டு கேக்குது.அதைக் கேட்டவுடனை எனக்குத் தூக்கி வாரிப் போட்டுது. உதுகளுக்கு எப்பிடி அரசியல் விழிப்புணர்வு ஊட்டுறது எண்டு தெரியேல்லை.அமெரிக்காவுக்கு எங்கடை பிரச்சினை பற்றித் தெரியிற அளவுக்கு ஊரிலையும் எங்கடை சனத்துக்குக் கொஞ்சம் சொல்லி வைக்க வேணும் எம்.பித் தம்பிமாரே!
சரி இந்தப் பிள்ளையள் சண்டைக்குள்ளை பிறந்து வளந்ததுகள்.அதுகளுக்குத் தெரியாதது புதுமையில்லை.ஆனா எங்கை தமிழற்றை பிரச்சினையைக் கொண்டு போனாலும் இடையிலை கிளித்தட்டு மறிக்கிற அமைச்சர் ஒருதரும் ஆர் அவர்? அவரை எனக்குத் தெரியாதே எண்டு சொல்லுறாராம்.கேட்கப் புதினமாய்த்தான் கிடக்குது.இனப் பிரச்சினையின்ரை மூலத்தை மற்றவைக்குத் தெளிவுபடுத்தின மனிசனைத் தெரியாமல்தான் மனித உரிமை மீறலுமில்லை, இனப் பிரச்சினையுமில்லை எண்டு சொல்லித் திரியிறாரோ? இவரைத் தெரிஞ்சதாய்க் காட்டிக் கொண்டால் பயங்கரவாதப் பிரச்சினை எண்ட வாய்பாட்டை மாத்திச் சொல்ல வேண்டி வந்தாலும் எண்டு நினைச்சுத்தான் ஒரேயடியாய் அவரைத் தெரியாது எண்டு சொல்லி விட்டாரோ?
கந்தையா..அந்தாள் மென்மையான மனிசன்தான்! ஆனா அந்தாள் உருவாக்கின கருத்து வலுவானது கண்டியோ.. சூரியனைக் குடையாலை மறைக்கேலுமே?
விழிச்சான்குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 46

நீண்ட காலம் விசாரணைகள் ஏதுமின்றி வெலிக்கடை,மகசீன் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை.ஒவ்வொரு அமைச்சராக, ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினராக அவர்கள் முறையிட்டு,தமது குறைகளை விபரித்து,நியாயம் கிடைக்கும் என எதிர்பார்த்து, ஏமாந்து களைத்து விட்டனர்.எந்தத் தெய்வங்களும் அவர்களது விடுதலை தொடர்பில் கருணை காட்டவில்லை.பெருங் குற்றங்கள் புரிந்தவர்கள் வெளியே இருக்க எந்தக் குற்றமும் செய்யாமல் சந்தேகத்தில் கைதாகி விசாரணை ஏதுமின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் இவர்களில் அடங்குவர்.
தமது விடுதலை தொடர்பில் அரசியல்வாதிகளிடம் முறையிட்டு எந்தப் பலனும் இல்லையெனக் கருதியுள்ள அரசியற்கைதிகள் இப்போது மதவாதிகளிடம் சரண் புகுந்திருக்கிறார்கள்.அவர்கள் தமது கோரிக்கைகளை அகில இலங்கை இந்து மாமன்றத்திடம் விடுத்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வட பிரதேசங்கள் குறிப்பாக யாழ்ப்பாணம் இருந்த வேளை கத்தோலிக்க திருச்சபை மக்களின் பிரச்சினைகள் பற்றி அரசாங்கத்துடன் பேசியது. சர்வதேசத்துக்கு மக்களின் பிரச்சினைகளை எடுத்தியம்பியது.பல்வேறு அறிக்கைகளை விடுத்தது. கத்தோலிக்க மற்றும் கிறீஸ்தவ திருச்சபைகள் சொன்னால் அது உலகச் சபையேறும் என அப்போது நம்பப்பட்டது.
 ஆனால் இன்று கத்தோலிக்க திருச்சபையோ, அங்கிலிக்கன் திருச்சபையோ,தென்னிந்திய திருச்சபையோ மக்களின் பிரச்சினைகள் குறித்து அக்கறை காட்டவில்லை.பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட போதோ, கத்தோலிக்க,கிறீஸ்தவர்கள் அதிகமுள்ள நாவாந்துறை மக்கள் மீது வன்முறை ஏவப்பட்ட போதோ ஒரு கண்டன அறிக்கைதானும் வெளியிடவில்லை.இது அகில இலங்கை இந்து மாமன்றம் உள்ளிட்ட இந்து மத அமைப்புக்களுக்கும் பொருந்தும்.
அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கை வற்றி வரண்டு விட, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் இரு தலைவர்களை நோக்கி அவர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள்.அவர்களும் ஏனைய சர்வமதக் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டுப் பயனில்லை என நம்புகிறார்கள்.நேரே அரசாங்க உயர் மட்டத்துடன் தொடர்பு கொண்டு அவர்களின் விடுதலைக்கு உதவப் போவதாக அவ்வமைப்பின் அறிக்கை கூறுகின்றது. அரசாங்கத்தின் உயர் மட்டத்துடன் தமக்குள்ள நல்லுறவைப் பயன்படுத்தி,தமது செல்வாக்கைப் பிரயோகித்து, தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலைக்காகக் கருமமாற்றுவது உயர்ந்த தருமுமாகும்.
அகில இலங்கை இந்து மாமன்றமும் வெறுமனே அரசியல்வாதிகளை விடுத்துத் தம்மை அணுகியுள்ளமையைக் கூறாமல் கூறி, தாம் உரியவர்களுடன் தொடர்பு கொண்டு கைதிகளின் விடுதலைக்கு உதவுவோம் என்ற சாரப்பட அறிக்கை விடுத்து விட்டு வாளாவிருத்தலாகாது. உண்மையில் “ அரசியற் கைதிகள் எம்மைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு வேண்டிக் கொண்டதன் பிரகாரம் ஜனாதிபதி அரசியற்கைதிகளை விடுவித்துள்ளார்” என்று செய்தி வர வேண்டும்.இல்லா விடில் அரசியல்வாதிகளைப் போல மாமன்றத்தை நோக்கியும் சுட்டுவிரல் நீட்ட மக்கள் தயங்க மாட்டார்கள்.
 ஏற்கனவே தற்போதய நீதி அமைச்சரான ரவூவ் ஹக்கீம் எதிரணியில் இருந்த போது அரசியல்கைதிகளை விடுவிப்பது குறித்துப் பேசியமை இவ்விடத்தில் ஞாபகத்துக்கு வருகின்றது. ஆனால் நீதி அமைச்சராகியதும் அவரால் எந்தக் கைதியையும் விடுவிக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்னுமொன்று சர்வமதக் குழுக்களில் நம்பிக்கையில்லை என்ற விடயம்.சர்வமதக் குழுக்கள் மக்களின் பிரச்சினைகளின் பால் கவனத்தைக் குவிக்கும் அமுக்கக் குழுக்கள் ஆகும். இவற்றுக்கிடையே ஒரு இணைப்பாக்கம் இருப்பது அவசியமாகும்.ஏனைய மத அமைப்புக்களை ஒரு புறம் விடினும் இந்து மத அமைப்புக்களுக்கு இடையிலேனும் ஒரு ஒற்றுமை ஏற்படுவது இன்றியமையாதது.அகில இலங்கை இந்து மாமன்றம் ஒரு பொன் முட்டையிடும் வாத்து என்பதால் சமூகப் பயன் மிக்க பல வேலைகளைச் செய்கின்றது.ஆனால் இந்து சமயப் பேரவை, வட பிராந்திய இந்துப் பேரவை,குருமார் ஒன்றியங்களும்,பீடங்களும் எனக் கிளை பிரிந்துள்ள அமைப்புக்களையாவது ஒற்றுமைப்படுத்தி ஒருங்கிணைப்பது அவசியமாகும்.
எவ்வாறெனினும் இந்து மாமன்றம் தூக்கிய காவடியை ஆடி முடித்தால் அது நல்ல சிவப் பணியாக அமைவதுடன்,சமூகத்தாலும் உவந்தேற்றப்படும் என்பதில் ஐயமில்லை.
விழிச்சான்குஞ்சு

சனி, 29 அக்டோபர், 2011

வியளம் கேட்டீர்களா? 45

கடந்த தீபாவளி போலவே இந்தத் தீபாவளியும் கடந்து விட்டது.நீண்ட யுத்த அரக்கனிலிருந்து விடுபட்ட போதும் மக்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமுமில்லை.நீண்ட இடம்பெயர் வாழ்வு சில இடங்களில் முற்றுப் பெற்றாலும் அகதிவாழ்வு முடியவில்லை.தகரக் கொட்டிலுக்குள் வாழ்வதும், நிவாரணத்துக்குக் கியூவில் நிற்பதும்,நிரந்தரத் தொழிலின்றி அலைவதும்,தொழிற் கெடுபிடிகளும் என இவ்வளவு கால வாழ்விலிருந்து எந்த மாற்றமும் ஏற்படவில்லை.அரசியற் தலைவர்கள் பேசுகிறார்கள்.ஆனால் காணாமல் போனவர் கதி தெரியாது.பிடிபட்டுச் சிறைக்குள் உழல்பவர்களின் விடுதலைக் கதையில்லை.புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் வேலையின்றி, வருமானமின்றி அல்லாடுவதுடன் இனியும் ஏதாவது நடக்குமா? என்ற அச்சத்துடன் பொழுதைக் கழிக்கின்றனர்.கிறீஸ் பூதம் போய் இனந்தெரியாத தாக்குதலாளிகள் இன்னுமின்னும் நரகாசுரன்களாக முளைத்து மக்களை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கிறார்கள்.
ஆக, தீபாவளி எந்த மாற்றமும் இல்லாமல் கடந்து செல்கிறது.இதனால் எப்போதும் போலவே சமய,சமூகத் தலைவர்கள் அடுத்த வருடமும் அமைதியும் நிம்மதியும் நிறைந்த ஆண்டாக அமையப் பிரார்த்திக்கலாம்!
இந்தத் தீபாவளியில் எமது பால்யப் பருவத் தீபாவளி நினைவுகள் கிளர்ந்து கழிவிரக்கம் (ழேளவயடபயை) கொள்ள வைக்கின்றன. தீபாவளி என்றால் புத்தாடை மட்டுமல்ல தின்பண்டங்களுந்தான்! இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பலகாரம் சுடும் வேலைகள் ஆரம்பித்து விடும்.முறுக்கு, பயற்றம் பணியாரம்,தோட்டச்சு,சிப்பி,கொக்கீஸ்,அரியதரம்,சீடை என்று விதம் விதமான பலகாரங்கள். எல்லாமே சத்து நிறைந்தவை.அயலவர்களுக்கும், சுற்றத்துக்கும் கொடுப்பது முக்கியமானது.யார் அதிக பலகாரம் செய்தது, சுவையாகச் செய்தது? என்ற ஆரொக்கியமான பெருமை பாராட்டல்களும் அப்போது இருந்தது.
காலையில் எழுந்து குளித்தோ,தோய்ந்தோ விட்டு, புதுச் சட்டை போட்டுக் கொண்டு கோவிலுக்குப் போவது முதற்பணி.அதன்பின் அக்கம் பக்கத்து வீடுகளுக்குப் போவோம்.அங்கு சிற்றுண்டி அருந்தி முடிய அந்த வீட்டுப் பிள்ளைகளும் சேர்ந்து கொள்வார்கள்.இவ்வாறு ஒவ்வொரு வீட்டுப் பிள்ளைகளும் சேர்ந்து அயலட்டையிலுள்ள உறவினர், நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வோம்.அனேகமாக எல்லா வீட்டிலும் பலகாரங்கள்தான்.சில வீடுகளில் பிஸ்கட்டும் கிடைக்கும்.
உத்தியோகம் பார்ப்பவர்களின் வீடுகளில் பத்திரிகைகளுடன் தமிழக சஞ்சிகைகளான ஆனந்த விகடன்,கல்கி,கலைமகள் முதலியவற்றின் தீபாவளி மலர்கள் பெரிய புத்தகமாக வர்ணப் படங்களுடன் கிடக்கும்.நாங்கள் அவற்றை ஆர்வத்துடன் வாசிப்போம்.ஊர் உலாத்து நிறைவு பெற்றால் அடுத்தது விளையாட்டுத்தான்.கிட்டியடித்தல்,கிளித்தட்டு மறித்தல்தான் பிரதான விளையாட்டுக்கள்.நாலு பெட்டிக் கெந்தல்,எட்டுப் பெட்டிக் கெந்தல்,ஒளித்துப் பிடித்தல் என்பனவும் இடம்பெறும்.மழையென்றால் கொக்கான் வெட்டல்,இலுப்பங் கொட்டை சிந்தல்,தாயம் உருட்டல் என உள்ளக விளையாட்டுக்கள் உள்ளன.வெடி கொளுத்தியும் விளையாடுவோம்.
மதியம் இறைச்சிச் சாப்பாடு. வீட்டில் யாராவது விருந்தினர் வந்திருப்பார்.கலகலப்பாகப் பொழுது கழியும்.மாலையில் தூரத்திலுள்ள உறவினர் வீடுகளுக்குப் போவோம்.வெடி கொளுத்தி, விருந்துண்டு,விளையாடி மகிழ்ந்த தீபாவளியை இனி எப்போதும் காண முடியாது.ஏனெனில் நமது வாழ்க்கைக் கோலம் மாறி விட்டது.
எங்களுக்காகவே தங்களைத் தியாகம் செய்து எத்தனையோ தொலைக்காட்சி நிலையங்கள் திரைக்கு வந்து சில மாதங்களேயான படங்களை விடியற் காலையிலிருந்தே போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்புகின்றன.எங்களது ரசனையறிந்து நடிக,நடிகையரின் தீபாவளி நிகழ்வுகளையும், பேட்டிகளையும் தருகின்றன.பட்டிமன்றம், பாட்டுக்குப் பாட்டு என ஏகப்பட்ட நிகழ்ச்சிகள்.இதை விடுத்து அயலட்டை வீடுகளுக்குப் போய் உணவருந்தி என்ன இலாபம்?அங்கு போனாலும் என்ன பலகாரமா கிடைக்கப் போகிறது? எங்கள் வீடுகளில் உள்ளது போல் றெடிமேட் கேக், மிக்சர், பிஸ்கட் எனக் கடைச்சாமான்கள்தானே கிடைக்கப் போகிறது.அது மட்டுமல்ல நாங்கள் போனாலும் அங்குள்ளவர்கள் தொலைக்காட்சியை விடுத்து எம்முடன் அளவளாவ மாட்டார்களே! அது பரவாயில்லை.வேண்டாவெறுப்பாகவல்லே சிலர் கருதுகின்றனர்.போறதும் காணும் படுகிற உபத்திரவமும் காணும் என்ற நிலையே பல இடங்களிலும்.
ஒரேயொரு விடயம் மட்டுந்தான் அன்றையதீபாவளியுடன் இன்றைய தீபாவளியை நினைவூட்டுகின்றது. அதுதான் வெடி! உடுப்பு எடுக்காத வீடுகளிலும் வெடிக்குக் குறைவில்லை. அத்துடன் அன்று போல் இன்றும் தீபாவளியில் சிறுவர்கள் வெடிக்குக் காசைக்; கரியாக்குவது போல மதுபானத்துக்கு பெரியவர்கள் கரியாக்குவதும் தொடர்கிறது.தீபாவளிக்கு முதல்நாள் உடுப்புக் கடைகளில் நின்ற சனக் கூட்டத்தை விட மதுபானசாலையில் நின்ற கூட்டம் அதிகமென அபிப்பிராயப்பட்டார் நண்பரொருவர்.
ஆக,தீபாவளி கழிந்து விட்டது.அமெரிக்காவுக்குப் போன அரசியற் தலைவர்கள் என்ன செய்தி கொண்டு வருவார்கள் என நாங்கள் பார்த்திருப்போம்.இல்லையெனில் அடுத்த தீபாவளி வரை பொறுத்திருப்போம்.வேறென்ன செய்வது?
விழிச்சான்குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 44

மழைகாலம் தொடங்கி விட்டது.மழை வந்து விட்டால் வீதிகளும் சேதமடைய ஆரம்பித்து விடும். எனவே வீதியில் பயணிப்போர் பாடு சொல்லுந்தரமன்று.தற்போது யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகள் பலவும் புனரமைக்கப்படுகின்றன.இப்பிரதேசத்தில் நீண்ட காலமாக முறையாகப் புனரமைக்கப்படாதிருந்த வீதிகள் முழு அளவில் புனரமைக்கப்படுவது முக்கியமானதாகும். நெருக்கடியான போக்குவரத்து நிலைமையை மேம்படுத்தும் வகையில் வீதிகள் அகலிக்கப்பட்டு, தரமானவையாக உருவாக்கப்படுவது சிறப்பானதாகும்.
 இந்த வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்டன.பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் கொஞ்சம் அணைகட்டுவதும், பிறகு பிட்டை உண்பதும் என வேலையை இழுத்தடித்த கதையை சிறு வயதில் படித்திருக்கிறோம். இந்த வீதி அபிவிருத்தி வேலைகளும் அப்படித்தான்.இங்கே சிறிதளவு வேலையைச் செய்து விட்டு, அதை விடுத்து வேறு இடங்களில் புதிய வேலையை ஆரம்பித்து,ஒன்றுமே முடிக்கப்படாமல் இழுபடுவது போல நீள்கிறது.பருத்தித்துறை வீதி,பலாலி வீதி,காங்கேசன்துறை வீதி என நாம் செல்லும் வீதிகளில் எல்லாம் இத்தகைய வேலைகள் இடம்பெறுவதைக் காணலாம்.
மழை வர வேண்டுமென மயில் காத்திருப்பது போல வீதி புனரமைப்பவர்களும் காத்திருந்தார்களோ என்னவோ இப்போதுதான் அனேக வேலைகள் அள்ளிச் செருகிய வேகத்தில் இடம் பெறுகின்றன.சில காலமாக புழுதி மழையில் குளித்த இப்பகுதிகள் இப்போது சேற்றுத் தடாகங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன.பயணிகள் பெரும் அசௌகரியங்களுடன் பயணிக்க வேண்டியுள்ளது. சுவாச நோயுள்ளவர்களுக்கு மழை சற்று ஆறுதலைத் தரும். எனது நண்பரொருவர் இவ்வளவு நாளும் புழுதியிலிருந்து பாதுகாப்புப் பெறும் நோக்கில் உட்பாதைகளால்தான் பயணித்தார்.அவர் போன்றவர்களுக்கு மழை சற்று ஆறுதலளிக்கக் கூடும்.
புனரமைக்கப்படும் வீதிகளின் இரு கரைகளும் வெட்டப்பட்டுள்ளதால் வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முடியாதுள்ளது.பெரியதொரு வாகனம் ஊர்ந்து ஊர்ந்து சென்றால் அதன் பின்னால் நீண்ட தூரத்துக்கு ஏனைய வாகனங்களும் ஊர்ந்து செல்ல வேண்டியே உள்ளது.இது விபத்துக்களுக்கும் வித்திடுகின்றது.
இவ்வீதிகள் வழியே இருட்டு வேளைகளில் பயணிப்போரும் பெரிதும் சிரமப்படுகின்றனர். வாகனங்கள் வீதியின் நிலையை அறிய வெளிச்சத்தைப் பிரகாசப் படுத்த வேண்டியுள்ளது. இதனால் எதிரே வருபவர்களுக்கு வீதி நிலைமை தெரியாமல் போகின்றது.இதுவும் விபத்துக்களுக்கு ஏதுவாகின்றது.
வீதி அபிவிருத்தி எமக்கு வரப்பிரசாதமானதுதான்.அது நீண்டகாலம் நிலைத்து நிற்கக் கூடிய காப்பெற் வீதிகளாக அமைவது சிறந்ததுதான்.ஆனால் முறையான திட்டமிடலில் ஒவ்வொரு ஒவ்வொரு இடமாக நிறைவு செய்யப்படுவதே வேண்டற்பாலது.மழை வருவதை அறிந்து, முன்கூட்டியே திட்டமிட்டுச் செயற்படுத்துவதே இன்றியமையாததாகும்.
விழிச்சான்குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 43

“என்ன இருந்தாலும் தாயல்லே.தாயை இப்பிடி எதிரியாக நினைக்கக் கூடாது” என்று ஒரு வயோதிபப் பெண் சொன்னார். “தாய்தான்.அவ பிள்ளைக்கு ஓரவஞ்சனை செய்யிறது சரியோ? கெட்டவள்.பிள்ளையின்ரை கருவைக் கலைக்கச் சொல்லி எந்தத் தாயாவது சொல்லுவாளோ?” என்று மற்றப் பெண் மறுமொழி சொன்னாள்.இப்படியே இவர்களின் கதை வலுத்து ஒருவருக்கொருவர் மட்டுமரியாதையில்லாமல் கதைக்கும் நிலைக்கு வந்து விட்டனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த இளம் பெண்ணின் கணவர் “மற்றவையின்ரை பிரச்சினைக்கு நீங்களேன் அடிபடுறியள்” என்று கூறிச் சமாதானப் படுத்தினார்.தொடர்ந்து “யாரந்தத் தாயும் பிள்ளையும்” என்று கேட்டார். அது தொலைக்காட்சியொன்றின் மெகா சீரியல் எனப்படும் நெடுந்தொடரின் இரு பாத்திரங்களாம்.
அவருக்கு வந்த ஆத்திரத்தில் “இனி வீட்டிலை ரி.வி. போட்டால் குடும்பந்தான் பிரியும்” என்று மனைவியை எச்சரித்தார். பக்கத்து வீட்டுப் பெண்ணைப் பார்த்து “பேரப்பிள்ளையளைப் பார்க்கிற வயசிலை தொடர்நாடகத்தைப் பார்த்துக் கொண்டு, பக்கத்து வீடுகளின்ரை வேலையையும் குழப்பிக் கொண்டிருக்கிறியள்.இப்பிடிக் கதைக்கிறதென்றால் இந்தப் பக்கம் வர வேண்டாம்” எனச் சூடாகக் கூறி அனுப்பி வைத்தார்.
தொலைக்காட்சியின் முன் காலத்தைக் கழித்து, அதில் பெரிது படுத்திக் காட்டப்படும் வாழ்க்கையில் எங்காவது அரிதாக நடக்கக் கூடிய தீய விடயங்களை உள்வாங்கி, அதை மற்றவரோடு விவாதித்து,மற்றவர்களில் அதைப் பிரயோகித்து…என நீள்கிறது பலருடைய, குறிப்பாக குடும்பப் பெண்களது வாழ்வு.தமிழ்ப் பற்று மிகுந்த கலைஞர் கருணாநிதி தொலைக்காட்சிகளைத்தான் மக்களுக்குப் பரிசளித்தார்.ஏனெனில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மனம் லயிக்கும் வாக்காளர்கள் தங்களது திருகுதாளங்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணம் அவரிடமிருந்தது.ஆனால் விதி இப்போது அவரது திருகுதாளங்களுக்குத் தீர்ப்பு அளித்துள்ளமை வேறு விடயம்.
நவீன தொடர்பாடல் சாதனங்களில் தொலைக்காட்சி தாக்கம் நிறைந்ததாகும்.அது சமூகங்களின் அறிவூட்டலுக்கு உதவ வேண்டும்.சமூக உயர்வுக்கு வழி காட்ட வேண்டும்.சமூகத்தை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும்.நல்ல மனப்பாங்குகளை, விழுமிய பண்புகளை ஏற்படுத்தத் தக்கதான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும்.ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தி, அவர்களிடத்தில் நேர்ச் சிந்தனைகளை வளர்க்க வேண்டும்.
நாம் பார்க்கும் தொலைக்காட்சிகள், குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழ்த் தொலைக்காட்சிகள் இத்தகைய நல்ல அம்சங்களைக் கொண்டிருக்கின்றனவா? என்றால் இல்லை என்றே பதில் வரும். பொதிகை,மக்கள் ஆகிய தொலைக்காட்சிகள் சமூக நலன் மிக்க நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. ஏனைய தொலைக்காட்சிகள் எல்லாம் சமூக மனப்பாங்குகளைச் சீரழிக்கும் மெகாசீரியல்களுடனேயே தமது காலத்தைக் கழிக்கின்றன.இலங்கையிலுள்ள சிங்கள மொழித் தொலைக்காட்சிகள் முற்போக்கான அம்சங்களை அதிகளவில் கொண்டுள்ளன.அவையும் தற்போது இந்தியத் தொடர்களின் மொழியாக்கங்களை வெளியிடத் தொடங்கி விட்டன.
தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கோ நிகழ்ச்சிப் பஞ்சம்.அங்கு பணியாற்றுபவர்களிடம் சொந்தமாக நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் வல்லமை இல்லையோ அல்லது அதற்குச் செலவிடும் பணத்தில் குறைந்த தொகையைச் செலவு செய்து தென்னிந்திய பழைய தொடர் ஒன்றை வாங்கி விடலாமோ என்னவோ… மெகாசீரியல்கள்,சினிமாப் படங்கள்,பாடல்கள் என்றே நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன.பெரும்பாலும் இங்குள்ள தொலைக்காட்சிகள் தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து அதன் நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்புச் செய்யும் நிலையங்களாகவே செயற்படுகின்றன.
இத்தகைய தொலைக்காட்சிகள் நமது வீட்டு அமைப்பினை மாற்றியுள்ளன.உடைகள்,நகைகளை மாற்றியுள்ளன.கூடவே நமது மனங்களையும்.அதனால்தான் கந்த புராணக் கலாசாரம் நிலவியதென நாம் மார்தட்டும் மண்ணில் ஏதேதோ நடக்கிறது!
விழிச்சான்குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 42

ஒக்ரோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வாசிப்பு அருகி வருவதனாலேயே இத்தகைய மாதம் பிரகடனப்படுத்தப்பட்டு விழிப்புணர்வு ஊட்டப்படுகின்றது. பல இடங்களிலும் வாசிப்பு மாத செயற்திட்டங்கள் நூலகங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளுராட்சி மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களில் நூலகத்தின் பணி தனியே புத்தகங்களை இரவல் வழங்கிப் பெற்றுக் கொள்வதல்ல என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரதேசத்தின் ஆவணக் களஞ்சியமாகவும், பிரதேசத்தின் வாசிப்பை மேம்படுத்தும் சமூகப் பொறுப்பு மிகு நிறுவனமாகவும் நூலகங்கள் அமைய வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.எனவே, அர்ப்பணிப்புடன் ஒரு புறமும், ஏனோதானோ என மறுபுறமுமாக வாசிப்பு மாத செயற்திட்டங்கள் நூலகங்களால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இன்று நூலகங்களை நோக்கி வாசகர்களை இழுப்பது பெரும் பிரச்சினையாகும்.முன்னர் ஒருவரை உமது பொழுதுபோக்கு என்ன என்று கேட்டால் புத்தகம் படிப்பது,பந்தடிப்பது,முத்திரை சேகரிப்பது,செல்லப் பிராணிகளை வளர்ப்பது எனப் பதில் வரும்.இன்றுள்ள பிள்ளையைக் கேட்டால் இதற்கு விடை சொல்ல அவன் சங்கடப்படுவான்.இல்லையேல் தொலைக்காட்சி பார்த்தல்,கணனியில் விளையாடுதல்,கணனியில் நண்பர்களுடன் சற்றிங் செய்தல் என்றே பதில் தருவான்.எம்மத்தியில் இருந்த நல்ல பழக்கங்கள்,ஆக்கபூர்வமான பொழுதுபோக்கு அம்சங்கள் மெல்ல மெல்ல அகன்று வருகின்றன.
காலை எழுந்தவுடன் தனிப்பட்ட வகுப்பு,அதன் பின் பாடசாலை,அதையடுத்து ரியூசன்,தொடார்ந்து தனிப்பட்ட வகுப்பு எனச் செக்குமாடாய் ஒரே புத்தகத்தை அரைத்து, அரைத்துப் பரீட்சை மையத்தில் இயங்கும் பிள்ளையை வாசிக்கச் செய்வது எவ்வாறு? பாடப்புத்தகத்தில் வெறுப்படைந்த அப்பிள்ளை இன்னொரு புத்தகத்தை விரும்புமா? என்பன இன்றுள்ள பிரதான கேள்விகள்.
வடமாகாண கல்வித் திணைக்களம் அண்மையில் ஒரு வேலைத்திட்டத்தைச் செய்தது. மாகாணத்திலுள்ள 12 வலயக் கல்வித் திணைக்களத்திலும் இருந்து தரம் 8 இல் கல்வி கற்கும் 50 பிள்ளைகளைத் தெரிவு செய்து அவர்களுக்கு மூன்று நாள் வதிவிடப் பயிற்சியொன்றை ஏற்பாடு செய்திருந்தது.இந்த மாணவர்களுக்கு கவிதை,சிறுகதை,நாடகம்,ஓவியம்,ஆக்கம், இசை என அழகியல் சார்ந்த உணர்வுத் தொற்றலை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது.
இவர்களின் ஈடுபாடு இங்கு மதிப்பிடப்பட்டது.உண்மையில் இவர்கள் அதீத ஆர்வத்துடன் இவற்றில் பங்குபற்றியதுடன் தமது படைப்புக்களையும் வெளியிட்டனர்.இவர்கள் தூண்டப்பட்டனர். அதனால் துலங்கினர்.மூன்று தினங்களுக்குள் சிறிய தூண்டலை ஏற்படுத்த முடியுமெனில் இருநூறு வரையான தினங்கள் நடைபெறும் பாடசாலைச் சூழலில் இதனை ஏன் ஏற்படுத்த முடியாது என்ற வினா இங்கு எழுந்தது.
சமூக மருத்துவப் பேராசிரியரான அமரர் நந்தி அவர்கள் ஆசிரியர்களுக்கு மிக அதிகளவில் வாசிப்புப்பட்டறைகளை ஏற்படுத்த வேண்டுமென பத்து வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அவரது கூற்று இப்போது மேலும் வலிவு பெற்றுள்ளது என்றே கூற வேண்டும். உயர் மட்டத்திலிருந்து மாணவ மட்டம் வரை கல்வித் துறையில் வாசிப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும்.அதனூடாகவே சமூகத்தின் அறிவு மட்டத்தை உயர்த்திலாம்.தனியே அறிவுழைப்பாளிகளை மட்டுமல்ல நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டிய சமூகக் கடமையும் எமக்குண்டு.எனவே, இன்றுள்ள ஆசிரியர்கள் மத்தியில் அழகியல் உணர்வை ஊட்டுவதும்,அதனை மதிப்பிட்டுக் கண்காணிப்பதும்,அதன் வழியே மாணவர்களிடத்தில் சுவறப் பண்ணுவதுமே இன்றியமையாததாகும்.
பிரதேச நூலகங்களும் மாணவ வாசிப்பை ஆசிரியர்களுடாக ஊக்கப்படுத்த முனைய வேண்டும். எனவே, பிரதேச மட்டத்தில் வாசிப்புப் பட்டறைகளை ஒழுங்கு செய்வது மிகுந்த பயனைத் தரும். இன்றுள்ள படைப்பாளிகள், அறிஞர்களை உருவாக்கிய நூலகங்களே! நாளைய படைப்பாளிகளையும் அறிஞர்களையும் உருவாக்க ஏதாவது செய்யுங்கள்.அதுவே வாசிப்பு மாதத்தின் உயர் இலக்காக இருக்கட்டும்.
விழிச்சான்குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 41

தேர்தல் முடிந்து விட்டது.ஆனால் எங்கள் வாக்கு.. என்றொரு சுவரொட்டி தென்பட்டது. ஆர்வத்தோடு சென்று பார்த்தேன்.அதில் “எங்கள் வாக்கு மதுபானம் பாவிக்காத ஒருவருக்கே” என்று இருந்தது.ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் அதனை வெளியிட்டிருந்தது.இத்தகைய சுவரொட்டிகளைத் தேர்தல் காலங்களில் வெளியிட்டால் மிக நன்றாயிருந்திருக்கும். வேட்பாளர்களுக்கு இருக்கும் தகுதிகளாக மதுபாவனையற்றவராக இருத்தல் என்பதையும் சேர்த்துக் கொள்வது இதைவிடச் சிறந்த நடவடிக்கையாகும்.
எமது ஜனாதிபதி அவர்களும் போதைப் பொருளற்ற இலங்கையை உருவாக்கவுள்ளதாகப் பல தடவை பேசியுள்ளார்.அது செயல்வடிவம் பெறும் போது மக்கள் வாழ்த்துவர்.அண்மையில் உள்ளுராட்சித் தேர்தலில் வென்ற தனது கூட்டுக்கட்சி அங்கத்தவர்களிடையே ஜனாதிபதி பேசும் போது போதைப்பொருள் வியாபாரிகள்,ஆயுதக் கொள்ளையர்,கப்பம் பெறுவோர் ஆகியோர் நாட்டிலிருந்து அகற்றப்படுவர் என்று அறிவித்துள்ளார்.இது வரவேற்கத்தக்கது.இதை அவர் செயற்படுத்த விளைந்தால் அமைச்சரவையிலிருந்து, பாராளுமன்றத்திலிருந்து, மாகாண மற்றும் உள்ளுராட்சி சபைகளிலிருந்து முதலில் களையெடுப்புச் செய்ய வேண்டியிருக்கும் என்பது பொதுமக்களின் கருத்தாகும்.பல மதுபான விற்பனை நிலையங்கள் அரசியல்வாதிகளாலேயே நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
21 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு மதுபானம்,சிகரெட் வழங்கினால் அந்த விற்பனை நிலையம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாகப் பத்திரிகைச் செய்தியொன்று கூறுகின்றது.
இன்றுள்ள பிரதான பிரச்சினை இளவயதிலுள்ள பிள்ளைகள் மத்தியில் தொற்றியுள்ள மது,சிகரெட் பாவனைப் பழக்கமாகும்.பிள்ளைகள் பெற்றார்களின் கண்காணிப்பில் இருந்த, மாலை வேளைகளில் விளையாட்டில் ஈடுபட்ட காலங்கள் அருகி விட்டன. ரியூசன் கலாசாரத்தில் நகரப்புறங்களை நோக்கி மாலை வேளைகளிலும்,விடுமுறை நாள்களிலும் செல்லும் ஆண்பிள்ளைகள் தமது சகபாடிகளுடன் இணைந்து சிகரெட்,மதுபானப் பழக்கங்களுக்கு அடிமையாகி விடும் நிலைமை காணப்படுகின்றது.பிள்ளைகளின் வாழ்க்கைக் கோலம் மாறி விட்டது.அவர்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.பெற்றோருடன் பேரம் பேசுமளவுக்கு அவர்கள் கலாசார மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.இன்று இது விஸ்வரூபப் பிரச்சினையாக, அவர்களது தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு வித்திட்டுள்ளது.
அது ஒரு நகரம்.பாடசாலை,வங்கிகள்,கடைத்தொகுதிகள்,தபாலகம்,சந்தை என்பவற்றோடு மதுபான விற்பனை நிலையங்களும் உள்ளன.நூறு மீற்றர் இடைவெளிக்குள் இரண்டு பார்கள் (அங்கிருந்தே அருந்த வேண்டியவை),ஒரு மதுபான விற்பனை நிலையம், ஒரு கள்ளுத் தவறணை என்பன உள்ளன.கள்ளுத் தவறணையோ பிரதான வீதியிலிருந்து முப்பது மீற்றர் உள்ளே ஒழுங்கையில் அமைந்துள்ளது.பார்களில் குறித்த வகையினரே மது அருந்த முடியும்.மதுபான விற்பனை நிலையத்திலும் நின்று அருந்த முடியாது.எனவே,இருக்கவே இருக்கிறது கள்ளுத் தவறணை. தவறணைக்குள் சிலர் சென்று அருந்துவர்.அது முடியாதவர்கள் பக்கத்திலுள்ள பற்றைக் காணிகளுக்குள் அமர்ந்து அருந்துவர்.
மாலை மயங்கும் நேரம் இளவயதினர் பதுங்கிப் பதுங்கி வருவர்.மிரளும் விழிகளுடன் அங்குமிங்கும் திரிவர்.பியர் போத்தலோ,ரின்னோ கிடைத்ததும் பற்றைக் காணிகளுக்குள்ளோ, இருட்டில் வீதியிலோ நின்று அருந்தி விட்டு அவற்றை வீதியில் எறிந்து விட்டுச் செல்வர். சிலருக்கு வீரம் வந்து போத்தல்களை வீதியில் உடைத்து விட்டோ, அயலிலுள்ள வீடுகளின் வேலிக்கு மேலாக எறிந்து விட்டோ செல்வர்.தட்டிக் கேட்பவர் கடும் வார்த்தைகளால் தாக்கப்படுவர்.சிலவேளை அடி வாங்கவும் நேரிடும்.ஏனையோர் எனக்கேன் என்று எண்ணியவாறு நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டு நடைப்பிணங்களாகச் செல்வர்.
அண்மையில் ஒருவர் டெங்கு எச்சரிக்கையைத் தொடர்ந்து தனது பற்றை சூழ்ந்த பனைவளவைத் துப்புரவு செய்தார்.அங்கு நூற்றுக் கணக்கான போத்தல்களைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்து விட்டார்.அவரது வளவு ஒரு “மினிபாராக” இருந்துள்ளது.
மதுவரித் திணைக்களமும்,பொலிசாரும் தங்கள் கடமையை உணர்வுபூர்வமாகச் செய்தால் எமது எதிர்காலச் சந்ததியினரை ஆரோக்கியமான சமூகமாகக் கட்டியெழுப்பலாம்.மதுபான விற்பனை நிலையங்களின் கோட்டாவை எதிர்பார்த்து சமூகக்கடமையைக் கோட்டை விடலாகாது.எனவே, எமது எதிர்கால சந்ததியை அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பை மதுவரித் திணைக்களமும் பொலிசாரும் கையேற்க வேண்டியது இன்றியமையாததாகும்.
விழிச்சான்குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 40

அது 788ஆம் இலக்க வழித்தட மினிபஸ்.நத்தை போன்று ஊர்ந்து வருகின்றது.பிற்பகல் நேரமாதலால் பயணிகள் அதிகமில்லை.குறிப்பிட்ட பஸ் சேவையில் இடையில் இரு இடங்களில் நேரக் கணிப்பாளர்கள் உள்ளனர்.முதலில் சண்டிலிப்பாயில் குறித்த நேரத்துக்கு பஸ் வருகின்றது. குறித்துக் கொண்டு நேரக்கணிப்பாளர் செல்லுமாறு கூறுகிறார்.பஸ் மீண்டும் நத்தையாகிறது.
மெல்ல மெல்ல ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சற்று இளைப்பாறுகின்றது.உள்ளேயிருக்கும் பயணிகளுக்கு புழுக்கம் ஒரு புறம்.பஸ் காலதாமதமாகிறது.குறித்த நேரத்துக்குச் செல்ல முடியாதுள்ளதே என்ற வெப்பியாரம் மறுபுறம். “நாலு மணிக்குக் கிளாஸ். அதற்குள் போக வேண்டும்” என ஒரு பெண்பிள்ளை சொன்னாள்.நடத்துநரோ 3.50 க்கு யாழ்ப்பாணத்தில் விட்டு விடுவதாகக் கூறினான்.இவ்வாறு வாய் திறந்தவர்களுக்கெல்லாம் பொறுமையாகவும், அன்பாகவும் பதில்கள் தரப்பட்டன.
வெளியே கடையில் வெற்றிலை வாங்கப் போன நடத்துநர் ஐந்தாறு நிமிடங்கள் கழித்து அவசரமாக ஓடி வருகின்றார். “சரி..சரி… எடுங்கள்.காரைநகர் ஒன்று வருகின்றது” என்று சாரதியிடம் சொன்னார்.பஸ் முயலாகப் பறக்கிறது.வழயில் அவசர கதியில் பயணிகள் ஏற்றப்படுகின்றனர்.இறக்கப்படும் பயணிகள் அவசரப்படுத்தப்பட்டார்கள்.அவசரம் காட்டாதவர்கள் கடுமையான வார்த்தைகளால் ஏசப்பட்டனர்.ஒருவர் உரிய இடத்தில் இறக்கப்படாமல் தள்ளி இறக்கப்பட்டார்.அசுர வேகத்தில் பயணித்து இந்தா அடிபடப் போகிறது எனப் பயணிகளை ஏங்க வைத்து அடுத்த நேரக்கணிப்பிடத்துக்கு வருகின்றது.மீண்டும் இதேபல்லவி.ஒருவாறு யாழ்ப்பாணத்தை வந்தடைந்தாயிற்று.
இவ்வாறான அனுபவங்கள் ஒவ்வொரு வழித்தடத்திலும் ஒவ்வொரு பயணிக்கும் ஏற்பட்டிருக்கும். அரச பேருந்துகளின் தொகை பயணிகளை ஏற்றப் போதாத நிலையில் தனியார் பேருந்துகள் இந்த வெற்றிடத்தை நிரப்புகின்றன.இவற்றின் நிறைவான சேவையளிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆயினும் ஒரு சிலர் இலாபத்தை நோக்கமாகக் கொண்டு செயற்படும் முறை ஒட்டுமொத்த தனியார் பேருந்துகள் மீதும் களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. போட்டி போட்டுக் கொண்டு ஓடி விபத்துக்குள்ளான சம்பவங்கள் பலவற்றில் அப்பாவிகளின் உயிர் பிரிந்த வரலாறுகள் பல எம்மிடம் உள்ளன.
இங்கே தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு ஒரு சங்கமுள்ளது.அதில் ஒவ்வொரு பேருந்தின் உரிமையாளரும் அங்கத்தவராக உள்ளனர்.ஒரு பேருந்து நேரத்தை எடுத்து பயணிகளை முறைகேடாக ஏற்றிச் சென்றால் இதனால் பாதிக்கப்படப் போவது இதே சங்கத்தில் அங்கத்தவராகவுள்ள இன்னொரு பேருந்து உரிமையாளரே!
அதுமட்டுமல்ல பயணிகள்தான் தமது எசமானர்கள் என்பதைப் பலரும் உணர்வதில்லை. பயணிகளோடு நடந்து கொள்ளும் முறையைப் பொறுத்தே அவர்கள் குறித்த பேருந்துகளில் ஏறுவார்கள்.இத்தகைய செயற்பாடுகளால்தான் பல பயணிகள் ஓடும் மினிபஸ்கள் ஓட உறு அரசபஸ் வரும் வரைக்கும் வாடியிருக்கும் நிலையுள்ளது.
பள்ளி செல்லும் சிறுவர்கள் எமது எதிர்கால மன்னர்கள் என்ற எண்ணப்பாங்கும் தனியார், அரச பேருந்துச் சாரதிகளிடம் இருக்க வேண்டும்.பாவம் அவர்கள்! மறிக்கும் போது சில சாரதிகள் ஏற்றிச் செல்ல மாட்டார்கள்.கருணையுள்ள சாரதிகள் மட்டுமே ஏற்றுவார்கள்.இந்தக் கருணை எல்லோரிடமும் வர வேண்டும்.இத்தகைய எண்ணப்பாங்கை சாரதிகளிடம் சங்கங்கள் வலியுறுத்த வேண்டும். இந்த பஸ்ஸில் ஏற வேண்டும்.நிம்மதியாகப் பயணம் செய்யலாம் என ஒவ்வொருவரையும் நினைக்க வைக்க என்ன செய்யப் போகிறீர்கள் சாரதிகளே! நடத்துநர்களே!
விழிச்சான்குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 39

இலங்கையில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைற்கொலர் எனப்படும் நாகரீகமான முறையில் மோசடிகளில் ஈடுபடுவோர் உள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.கனவான்களைப் போன்று தோற்றமளிக்கும் இவர்கள் பாரியளவில் மோசடிகளில் ஈடுபடுவதாகவும், இக்குற்றவாளிகளால் வருடாந்தம் 5 பில்லியன் ரூபா மோசடி செய்யப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.இத்தகைய வைற்கொலர் மோசடிக்காரர்கள் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைற்கொலர் ஜொப் என்பது கண்ணியத் தொழில்கள் என்று கருதப்படும்.சமூகத்தில் மதிப்பு மிக்க தொழில்கள் கண்ணியத் தொழில்களாகும்.கண்ணியத் தொழில்களில் பிள்ளைகளை ஈடுபடுத்தவே ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவர்.இத்தொழில்களில் பலவும் வாண்மைத் தொழில்களாக அடையாளப்படுத்தப் படுகின்றன. அத்தகைய தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கு சமூக மதிப்பும் உள்ளது.ஆனால் சில பிரகிருதிகள் அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம் என்ற நிலையில் தமது தொழிலைக் கேவலப்படுத்தும் வகையில் செயற்படுவர். அவ்வாறானவர்களால் தொழில்களின் சமூகப் பெறுமானம் குறைந்து, ஒட்டுமொத்தமாக அத்தொழிலில் ஈடுபடுபவர்கள் எல்லோர் மீதும் சமூகம் சுட்டுவிரல் நீட்டும் நிலை ஏற்படுவது துர்பாக்கியமானது.
ஒவ்வொரு துறையிலும் வணிக மனப்பாங்குடன் செயற்படுபவர்கள் நுழையும் போது அத்தொழில் மாசுறுகின்றது.இது தொழிற்சூழலில் ஏற்படும் மாசடைதல்தான்.கல்வியைப் பொறுத்து இது அதிகம் எனலாம்.எந்தவித கற்பித்தல் பயிற்சியும் இல்லாமல், கல்வி உளவியல் பற்றிய அறிவில்லாமல், தனியார் கல்வி நிலையங்களில் தமது குரல் வன்மையையும், அள்ளிச் சிந்தும் பகிடிகளையும் நம்பிக் கற்பிக்கும் தனியார் கல்வி நிலைய ஆசிரியர்களிலிருந்து தொடங்குகிறது இப்பிரச்சினை. விளம்பரங்களால் கட்டியெழுப்பப்படும் தனியார் கல்வி ஒரு மாயமானாகவே பல இடங்களிலும் பெற்றோர்களாலும், மாணவர்களாலும் உணரப்பட்டுள்ளது.அவர்கள் உணர்ந்ததும் அடுத்த தனியார் கல்வி நிலையத்தையே நாடுகின்றனர்.இதற்குப் பாடசாலைகள் மீதான அவர்களின் அவநம்பிக்கையே காரணம்.
ஒரு தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர் தனது பெயரின் பின்னால் சில பட்டங்களை இணைத்து ரியூட்களை அடித்து வெளியிடுவார்.ஆனால் அவரிடம் அடிப்படைப் பட்டங் கூட இல்லை என்பது நெருங்கியவர்களின் கருத்தாகும்.அதுபோல தனது பெயரின் முன்னும் பின்னும் பட்டங்களை அடுக்கும் (பத்திரிகை விளம்பரங்களில்) ஒரு ஆசிரியரின் சுயவிபரக் கோவையில் எந்தப் பட்டமும் இல்லை என்கிறார் விடய எழுதுநர்.அவர் தற்போது தனது பெயரின் முன்பு போடப்பட்ட பட்டத்தைச் சுருக்கி கலாநிதி எனப் போடுகிறார்.
அதுபோல இன்னொரு பாடநூலாசிரியரும் பெறாத பட்டங்களை அடுக்கி வைத்து தனது பயிற்சிப்பண்டங்களை விற்பனை செய்கிறார். இன்னொருவரோ பல வேடங்களில் நடிக்கும் கமலஹாசனையே தோற்கடிப்பது போல எல்லாப் பாடங்களுக்கும் பயிற்சிப்புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுவார்.அவரும் இலங்கையில் இல்லாத ஒரு பதவிப் பெயரைத் தனது புத்தகங்களில் பயன்படுத்துவார்.இன்னொருவருவரும் தனது பெயரின் முன்பாக கலாநிதி என்ற உயரிய பட்டத்தைச் சுமந்துள்ளார்.அவர் தற்போது தன்னைப் பேராசிரியர் என்று விளம்பரப்படுத்தி உள்ளார்.ஆனால் அவர் ஒரு ஆசிரியராக நியமனம் பெற்று, தகைமையீனம் நிரூபிக்கப்பட்டு வேலையிழந்தவராவார்.
மருத்துவத்துறையிலும் இத்தகைய மோசடிப்பேர்வழிகள் அதிகமாகும்.தனியார் வைத்தியசாலைகள் பலவற்றை ஆயுர்வேத வைத்தியப் பயிற்சி பெற்ற பலர் நடத்துகின்றனர்.அவர்கள் ஆங்கில மருந்துகளையே வழங்குகின்றனர்.அதைவிட எந்தப் பயிற்சியும் பெறாமலே பல வைத்தியசாலைகள் இயங்குகின்றன.
அரச செயலகத்தில் பிறப்பு,இறப்பு, விவாகச் சான்றிதழ்களையோ,காணி உறுதிப் பிரதிகளையோ பெறுவதற்குப் பலரும் தரகர்களையே நாடுகின்றனர். அவர்களும் மக்களின் அறிவின்மையைப் பயன்படுத்திப் பணமீட்டுகின்றனர்.ஒரு பாடசாலையில் க.பொ.த.சாதாரண தர மாணவருக்கு தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக மாணவனொருவனின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தை உறுதிப் படுத்த வேண்டியிருந்தது.அப்போதுதான் அது பதிவு செய்யப்படாத பத்திரம் என்பது தெரிந்தது. வீட்டில் பிறந்த பிள்ளைக்கு அவ்வேளை பதிவு செய்யாமல் விட்டு விட்டு, பின்னொரு காலத்தில் தரகர் மூலம் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் பெறப்பட்டிருந்தது.நல்ல வேளை விடயத்துக்குப் பொறுப்பான ஆசிரியர் தலையிட்டு முறைப்படியாக காலங்கடந்த பிறப்புக்கு விண்ணப்பித்து ஆவன செய்தமையால் உண்மையான பத்திரம் பெறப்பட்டது.
இன்னொரு சம்பவம் சட்ட மோசடிக்காரர்களை வெளிப்படுத்துவதாகும்.ஒரு ஆசிரியத் தம்பதி தமக்கான காணியொன்றைக் கொள்வனவு செய்ய விரும்பியது.உரிமையாளர் உறுதிப் பிரதியை வழங்கினார்.அவர்கள் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்த போது அது பதிவு செய்யப்படாதது தெரிந்தது.காணி உரிமையாளரின் பெற்றோரின் பெயரில் இருந்தது. இதை எழுதிய சட்டத்தரணி இறந்து தசாப்தங்கள் கடந்து விட்டது.அவரை எழுப்பிக் கேட்கவும் முடியாது.அக்காணி தற்போதய உரிமையாளர்களுக்குச் சீதனமாக வழங்கப்பட்டதாகும்.இப்போது வேறு சட்டமுறையாகக் காணியைப் பதிய நடவடிக்கை எடுத்துள்ளனர் வயோதிபர்களான காணி உரிமையாளர்கள்.
திட்டம் போட்டுத் திருடுற கூட்டம் திருடிக் கொண்டேயிருக்குது.அதைச் சட்டம் போட்டுத் தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டேயிருக்குது.திருடனாப் பாத்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று நம்ம தலைவன் வாத்தியார் பாடினது இதுகளைக் கண்டுதானோ?
விழிச்சான்குஞ்சு

செவ்வாய், 25 அக்டோபர், 2011

வியளம் கேட்டீர்களா? 38

வல்லைவெளியைக் கடந்து போகும் தருணங்களில் எல்லாம் ஈழத்து இலக்கிய மூலவர் இலங்கையர்கோன் எழுதிய வெள்ளிப் பாதசரம் சிறுகதைதான் ஞாபகத்துக்கு வரும்.வல்லிபுரக் கோவில் திருவிழாவுக்கு மாட்டுவண்டிலில் சென்று திரும்பும் ஒரு இளந் தம்பதியினரின் ஊடலும் கூடலுமே அக்கதை.வல்லிபுரக் கோவில் திருவிழா என்றால் தூர இடங்களில் இருந்து பக்தர்கள் புறப்பட்டு, திருவிழா முடியும் வரை அங்கு தங்கி நின்று வருவார்கள்.இறைவனைத் தியானிப்பது, அங்கு நிறுவப்பட்ட மடங்களில் சமைத்துண்பது,மடங்களில் உறங்குவது என்று அவர்களது நிகழ்ச்சி நிரல் காணப்படும்.கடல் தீர்த்தமாடித்தான் வீட்டிற்கு வருவார்கள்.இது பழங்கதை.
வெள்ளிப் பாதசரம் கதையில் வல்லைவெளியின் இரு மருங்கிலும் பனைகள் பேய்கள் போலத் தோற்றம் காட்டி நின்றதாக கதாசிரியர் எழுதியுள்ளார்.இன்றோ அது மூளியாக நிற்கிறது. வெயில்தான் சுட்டெரிக்கிறது.வல்லைவெளியை ஒரு நகரமாகக் கட்டியெழுப்புவது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.நன்செய் நிலங்களிலும்,பழைய பூங்கா போன்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களிலும் கட்டடங்களை அமைக்க முட்டி மோதுவோர் வல்லைவெளியில் கட்டடங்களை நிறுவுவது பற்றிச் சிந்திப்பது நலமானது.அவ்வாறு சிந்திப்பதற்கான வாய்ப்புக்களை வெளிப்படுத்துவதே இப்பத்தியின் நோக்கமாகும்.
வல்லைவெளி எனப்படும் கடனீரேரிப் பகுதி தொண்டமானாறு பாயும் பிரதேசமாகும். இப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு முதலில் தொண்டமானாற்றின் கரைகளை எல்லைப் படுத்தி அணை கட்ட வேண்டும்.அணையின் தென்புறத்தேயுள்ள நிலத்தை உயர்த்த வேண்டும். தென்புறமானது யாழ்ப்பாண நகரத்துடன் தொடர்பு கொள்ள வசதியாக அமைந்துள்ளதுடன் குடியிருப்பு நிலங்களின் தொடர்ச்சியாகவும் அமைந்துள்ளது.அத்துடன் பிரதேசத்தில் குடியிருப்போ, கட்டடத் தொகுதிகளோ அமையும் பட்சத்தில் குடிநீர்த் தேவை அதிகமாக எழும்.இதற்கு வாய்ப்பாக நிலாவரைக் கிணறு காணப்படுகிறது.திருகோணமலை நகரத்தின் பெரும்பாலான பிரதேசங்களின் குடிநீர்த் தேவையை கந்தளாய்க் குளத்து நீரே பூர்த்தி செய்வது குறிப்பிடத் தக்கது.நிலாவரைக் கிணறு வல்லைவெளியிலிருந்து தென்மேற்கே சில கிலோ மீற்றர்கள் தொலைவிலேயே உள்ளது.
சிறந்த முறையில் விரிவாக்கப்பட்ட வீதி அமைப்புக் காணப்படும் இப்பிரதேசத்தில் அலுவலகத் தொகுதிகள், விருந்தினர் விடுதி,கடைத் தொகுதிகள் அமைக்கப்படும் போது பிரதேசமும் அபிவிருத்தி காணும்.அதேவேளை பிரதேசத்தின் முக்கியத்துவமும் அதிகரிக்கப்படும். நகரத்தில் ஒண்டிக் குடித்தனம் நடத்தும் மாகாண அலுவலகங்களின் நடைமுறைப் பிரச்சினைகளும் தீரும்.
இப்பிரதேச அபிவிருத்தியில் சமகாலத்தில் சூழலியல் அபிவிருத்தியும் செய்யப்பட வேண்டும். குறிப்பாக பிரதேசத்தை எல்லைப்படுத்தும் வகையில் சவுக்க மரங்களை நாட்ட வெண்டும். அத்துடன் தென்னை, பனை மரங்களையும் நாட்ட வேண்டும்.இவை இப்பிரதேசத்தில் வளரக் கூடிய சாதகமான மரங்கள்.காற்றுத் தடையாகவும், வெப்பச் சீராக்கிகளாகவும் இவை செயற்படும். சிறந்த சுற்றுலா மையமாக இப்பிரதேசத்தை எதிர்காலத்தில் மாற்றியமைப்பதற்கும் திட்டமிட்ட மரநடுகை உதவும்.
அபிவிருத்தியின் விளைவாக இப்பிரதேசம் குப்பைகள் குவியும் இடமாக மாறி விடலாகாது. கடலுயிரிகளின் சமநிலை,பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரம் என்பன பாதிக்கப்படாதவாறு செயற்பட வேண்டியது அவசியமாகும்.
நீண்ட காலத் திட்டமிடலில் தொண்டமானாற்றை, - கடலுடனான தொடர்பைத் தடுப்பணைகள் மூலம் நீக்குவதன் மூலம் - நன்னீர் ஆறாக மாற்றியமைப்பின் பிரதேசம் மேலும் வளமுற்றுச் சிறப்புறும்.அதற்குரிய சாதகங்கள் குறித்தும் ஆராயலாம்.
உப்புக் காற்றில் வேதனைகள் சுமந்து வந்த பாடல்கள் இழைந்த வல்லைவெளியில் வசந்தப் பாடல்கள் துளிர்க்கும் நாள் எந்நாளோ? 
விழிச்சான்குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 37

மதுபான நிலையங்களில் மது விற்பனையில் ஈடுபட்ட 21 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்றொரு செய்தி வெளியாகியுள்ளது.சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிக் கதைக்கும் பலரும் பேச மறுக்கும் விடயம் சிறுவர் ஊழியம் பற்றியதாகும்.மத்திய தர,மேற்தர மக்களின் வீடுகளில் தொண்டூழியம் புரிபவர்கள் சிறுவர்களே.இவர்கள் மலிவான தொழிலாளர்கள்.முரண்டு பிடிக்க மாட்டார்கள். முரண்டு பிடித்தாலும் தண்டனை கொடுத்து அடக்கி விடலாம்.எனவே,பெரும் புள்ளிகள் பலரும் செல்லப்பிராணிகளான நாய்,பூனைகளோடு சிறுவர்களையும் வளர்க்கிறார்கள்.
கடைகளில் பொருட்களை நிறுத்துக் கட்டித் தருபவர்கள்,கோழிக் கடைகளில் கோழி உரிப்பவர்கள்,தொட்டாட்டு வேலை செய்பவர்கள்,பேக்கரிகளில் வேலை செய்வோர், இனிப்புத் தொழிலகங்களில் பணி புரிவோர் என அங்கிங்கெனாதபடி தொழில் நடைபெறும் இடங்களில் எல்லாம் சிறுவர்களைத் தரிசிக்கலாம்.முதலாளிமாரின் வசைகளை உள்வாங்கியபடி எந்தவித சலனமும் இல்லாமல் அவர்கள் வேலை செய்து கொண்டிருப்பர்.துவிச்சக்கர வண்டி, மோட்டார் வண்டி திருத்துமிடங்கள்,ரயர் ஒட்டுமிடங்கள்,வாகனச் சுத்திகரிப்பு நிலையங்களிலும் இவர்களே கதாநாயகர்கள்..ஹோட்டல்களின் அறைப்பையன்களும் சுழழஅ டிழல இவர்களே.அத்துடன் மதுபான விற்பனை நிலையங்களிலும்…அவ்வளவே!
நமது சூழலில் வறுமை,குடும்பத் தலைவர்களின் இழப்பு,சில பாடசாலைகளின் அடாவடித்தனம் ஆகியவற்றினால் கட்டாயக் கல்வி பெறும் 16 வயது என்ற காலத்திலேயே சிறுவர்கள் பலரும் தொழிலுக்குள் இறங்கி விடும் நிலைமை காணப்படுகிறது.எமது கல்வி முறை சிறுவர்கள் கல்வி அடைவைப் பொறுத்து அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் குறித்த காலம் வரை கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.அதனால் பலரும் 11 வருடங்கள் படித்து நிறைவில் எல்லாப் பாடங்களிலும் சித்தியெய்தத் தவறி விடுகின்றனர்.கல்வி கற்கும் காலத்தில் ஒரு பிள்ளை அதிக துலங்கலை வெளிப்படுத்தா விட்டால் அப்பிள்ளையை தொழிநுட்பக் கல்வியின் பால் ஆற்றுப்படுத்த வேண்டியது இன்றியமையாததாகும்.மேலை நாடுகளில் அதற்கான பொறிமுறை உள்ளது.இங்கோ தொழிநுட்பக் கல்லூரிகள் இருந்தாலும் பாடசாலைகளுக்கும், அவற்றுக்கும் இடையிலான தொடர்புகள் இல்லை.அதற்கான இணைப்பாக்க வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்படவில்லை.
வீணாகச் சில வருடங்களைச் செலவழித்து அதன் பின் வீட்டில் நிற்பததையே இக்கல்வி முறை பின்தங்கிய மாணவர்கள் தொடர்பில் எமக்குத் தருகின்றது. பிள்ளையின் அடைவை தரம் 9 இல் மதிப்பிட்டு அதற்கேற்ப பிள்ளையைப் பாடசாலைகள் தொழிநுட்பக் கல்லூரிக்கு அனுப்பும் வகையில் பொறிமுறையொன்று செயற்படுத்தப்பட வேண்டும்.இதன் பிரகாரம் பிள்ளை உரிய திறன்களைப் பெற்று சிறுவர் என்ற வயதையும் கடந்து தொழிலுலகுக்குள் பிரவேசிக்க முடியும்.சட்டத்தின் பிடிக்குள் அகப்படும் நிலைமையும் ஏற்படாது.
சிறுவர்கள் தொழிலுக்குப் போகாவிட்டால் அவர்கள் வீட்டில் அடுப்பெரியாது என்பது பல குடும்பங்களின் நிலை.குடும்பங்களின் பாரத்தைச் சுமப்பவர்களாக அவர்கள் உள்ளனர். கணவன் கை விட்டுப் போக, தாய் நோயாளியாக, அந்தக் குடும்பத்தைத் தாங்கும் தூணாக பதின்ம வயது நிரம்பிய சிறுவன் வேலைக்குப் போகும் நிலை ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு வீட்டிலேனும் உள்ளது.அதை விட வயல் வேலைக் காலத்தில், புகையிலை வெட்டுக் காலத்தில் என பருவ வேலைக்குச் செல்பவர்களும் இருக்கிறார்கள்.இக்காலத்தில் அதிக தொழிலாளர்கள் தேவைப்படுவதால் அந்த இடத்தைச் சிறுவர்களே நிரப்புகின்றார்கள்.
 வறிய, பின்தங்கிய, இச்சிறுவர்களைக் கவனித்து உதவ  முன்வருவோர் மிகக் குறைவே. சிறுவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்குப் பதிலாக அவர்கள் குறித்து சமூக மட்டத்தில் ஆராய்ந்து அவர்களுக்கான உதவித் திட்டங்களை வழங்க சமூக அமைப்புக்கள் முன்வர வேண்டும்.இன்றைய சிறுவர்களை நல்ல முறையில் வளர்த்தெடுப்பது எதிர்கால சமூக உருவாக்கத்துக்கு அவசியமானதாகும்.அவ்வகையில் தொடரானதும், சிறியதுமான முனைப்புக்களே சிறுவர்களின் வாழ்வை மேம்படுத்தும்.
விழிச்சான்குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 36

தமிழர்களைப் பனங்கொட்டைகள் என்றும், சிங்களவர்களைப் பலாக்கொட்டைகள் என்றும் அடை கொடுத்து அழைத்த காலம் ஒன்றிருந்தது. யாழ்தேவி புகையிரதம் யாழ்ப்பாணத்தை நோக்கி வரும் போது பனங்கொட்டை..பனங்கொட்டை.. என்று சத்தமிட்டபடி வரும்.கொழும்புக்குச் செல்லும் போது பலாக்கொட்டை..பலாக்கொட்டை என்ற சத்தமிட்டபடி செல்லும்.இவ்வாறு பகிடியாகக் கூறுவார்கள். சிங்கள மக்களின், குறிப்பாக தாழ்நில– கரையோர-மக்களின் வாழ்வில் பலா மிக முக்கியத்துவம் பெற்றிருந்தது.அது சோற்றுப் பழம் என்று வர்ணிக்கப்பட்டது.ஏழை மக்களின் பிரதான உணவாக, அவர்களின் பசியைப் போக்கியது.
அதுபோல வடபுல மக்களின் வாழ்வோடு பனை பின்னிப் பிணைந்திருந்தது.வடபுலத்தின் குறியீடும் அதுவே.பூலோக கற்பகதரு என்றும், தாலம் என்றும் போற்றப்படும் பனை எமது முன்னைய சந்ததியினரின் வாழ்வுக்கு வழி சமைத்த பெருமரமாகும்.நட்ட பனை போல நிற்கிறான் என்று செயற்படாத ஒருவனைக் கூறுவார்கள்.பனை இயற்கையில் வளரும் ஒன்று.அதை ஒழுங்காக நாட்டினால் அது பயன் தரும்.
நவராத்திரி காலத்தில் பனையின் ஞாபகம் வரும்.கூடவே மில்க்வைற் கனகராஜாவுடையதும். நவராத்திரிக் காலத்தில் அவர் பல இடங்களிலும் மரநாட்டு இயக்கத்தைச்  செயற்படுத்தியிருந்தார். விஜயதசமியன்று பனம் விதைகளை நாட்டுவது அவரது பிரதான பணியாக இருந்தது.அவரால் நாட்டப்பட்ட பனம் விதைகள் இலங்கை பூராகவும் வளர்ந்து அவரது பெயரைப் பறைசாற்றுகின்றன.
பனைவளத்தின் முக்கியத்துவத்தை அவருடைய புலமைத்துவ ஆலோசகராக இருந்த பல்கலைப் புலவர் க.சி.குலரத்தினம் மில்க்வைற் செய்தி மூலமாகவும், வனைவளம் நூலைப் பதிப்பித்தும், சிறு பிரசுரங்களை வெளியிட்டும் வலியுறுத்தினார்.மர நாட்டு வைபவம் ஒன்றின் பொருட்டு ஒரு பிரதேச செயலகத்தால் மயானமொன்றில் பனம் விதைகள் நாட்டப்பட்டன.நட்டதுதான்! அவற்றில் ஒன்று கூட முளைக்கவில்லை.ஊமல் கொட்டைகளாகப் பொறுக்கி எரிப்பதற்குத்தான் அவை பயன்பட்டன.அவ்வாறல்லாமல் நடுகையும் தொடர்ந்த பராமரிப்பும் அவசியமாகும். பல இடங்களிலும் வயற்காணிகளதும் வளவுகளதும் எல்லைகளாகப் பனை மரங்களே இருந்தன. போரில் அழிக்கப்பட்டவற்றில் பனைதான் அதிகம் எனலாம்.அதனுடைய வைரத்தன்மை ரவைகள், குண்டுகள் துளைக்க முடியாதளவுக்கு,துளைத்தாலும் பாதிப்பு அதிகம் ஏற்படுத்தாதளவுக்கு இருந்தமையால் காவலரண்களின் பயன்பாட்டுக்கு அவை இரையாக்கப்பட்டன.
பனை மர சோபனம் எனப் பனைமரத்தின் பயன்களை விபரித்து வரகவி பொன்னாலை கிருஷ்ணபிள்ளை இயற்றிய பாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தன.நுங்கு அருந்த இனியது.அருந்திய பின் கால்நடைகளின் உணவாகும். பனம்பழக் களி பற்சுகாதாரத்துக்கு உதவுவதுடன் வயிற்றிலுள்ள பூச்சிகளை அழிக்கும் சக்தி வாய்ந்தது.யுத்த காலத்தில் வசதி குறைந்த மக்களின் உடைகளைத் துவைக்கப் பனம்பழங்களியே பயன்படுத்தப்பட்டது. மேலதிக பனங்களி காயவிடப்பட்டு பனாட்டாக்கப்பட்டது.அது பலவித பொருட் சேர்க்கையுடன் பாணிப்பனாட்டாக்கப்பட்டது.
பணங்களி பிழியப்பட்ட பனம் விதைகள் நாட்டப்பட்டு பனங்கிழங்கு பெறப்பட்டது.எஞ்சிய விதையைப் பிளக்கும் போது சுவையான பூரான் கிடைத்தது.காய்ந்த விதை ஊமலானது.  புகையிலை கோடா போடும் தொழிலில் பிரதான எரிபொருளாக ஊமல் பயன்படுத்தப்பட்டது. பனங்கிழங்கை அவித்து உண்பதும், அவித்ததைத் துவைத்து உண்பதும் நாவூறும் செய்திகளாகும். அவிக்காது காயவிட்டு ஒடியலும், அவித்துக் காய விட்டு புளுக்கொடியலும் பெறப்படும். கொண்டாடினான் ஒடியற் கூழ் என்று கல்லடி வேலுப்பிள்ளை ஒடியற்கூழின் சிறப்பைப் பாடியுள்ளார்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன்.இறந்தாலும் ஆயிரம் பொன் என்று ஒரு பழமொழியுண்டு. பனைக்கும் இது நூறு வீதம் பொருந்தும்.பனை ஒவ்வொரு மனிதனும் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு உண்மைப் பொருளுமாகும்.
ஆக,பனையில்லாமல் வாழ்வில்லை என்று வாழ்ந்த வடபுல மக்கள் தமது எதிர்கால சந்ததிக்குப் பனையற்ற உலகைக் கையளித்தலாகாது.பனை எமது மூதாதையரின் ஜீவன் வாழும் தொன்ம அடையாளம். பனை அபிவிருத்திச் சபையினரே!சுற்றுச் சூழலியலாளர்களே! சமூக அமைப்புக்களே பனைவளத்தைப் பெருக்கும் உங்கள் செயற்பாடுகளை முடுக்கி விடுங்கள். வரலாறு உங்களை  வாழ்த்தட்டும்.
 விழிச்சான்குஞ்சு

வியளம் கேட்டீர்களா? 35

சர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்.சமூக மட்டத்தில் ஆசிரியர்களது முக்கியத்துவம் குறைந்துள்ள சூழலில் அவர்களது முக்கியத்துவத்தைச் சமூகத்துக்கு எடுத்துரைக்கும் நாளாக இது அமைகின்றது.நமது சூழலில் குருவின் முக்கியத்துவம் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது.குருவிலேயே முழுச் சமூகமும் தங்கியிருந்தது.குரு சொல்வதே வேதம் எனக் கருதப்பட்டது.குருவுக்குப் பணிவிடை செய்தே கல்வியைப் பெற முடிந்தது. அதன் பின் சட்டம்பியார் என்ற பதம் புழக்கத்துக்கு வந்தது.அவர் தோம்பு உறுதிகளை எழுதுவது, கோவில்களை நிர்வகிப்பது,கிராம நிறுவனங்களைக் கட்டியெழுப்புவது,திருமணம் செய்து வைப்பது என சமூக முக்கியத்துவம் மிக்க பணிகளுக்குப் பொறுப்பாக இருந்ததோடு சமூகத் தலைமகனாக விளங்கினார்.உபாத்தியாயர் காலத்தில் அவர்களே பாடசாலைகளை நிறுவினர்.அல்லது நிறுவப்பட்ட பாடசாலைகளில் இணைந்து பணியாற்றினர்.கூட்டுறவு இயக்கத்தை பிரதேசந் தோறும் வளர்த்தது உட்பட சமூக முன்னேற்றம் கருதிய பல செயற்பாடுகளில் இவர்களது பங்களிப்பு காத்திரமானதும், இன்று வரை நினைவு கூரப்படுவதுமாகும்.
 1960களின் இறுதியில் பாடசாலைகள் பலவும் அரசுடமையாக்கப்பட்டன.பாடசாலைகளுக்கு ஆசிரியர் என்ற பெயரில் பதவியர் இணைக்கப்பட்டனர்.ஆசிரியர்கள் என்று வந்த பின்னர் அவர்களுக்கான சமூக முக்கியத்துவமும் குறைந்து போனது.நாட்டின் பணித்துறையில் அதிக இடத்தை இவர்கள் கொண்டிருக்கின்றனர்.மருத்துவத்துறைக்குப் படித்து அது கிடைக்காத போது உயிரியல் விஞ்ஞானப் பட்டப்படிப்பை மேற்கொள்வது போலவே பலரும் இதைவிடச் சிறந்த தொழில் கிடைக்காத போது ஆசிரியத் தொழிலுக்குள் வந்துள்ளனர்.அரசாங்கமும் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வாக ஆசிரியர் நியமனத்தையே வழங்கி விடுகின்றன.விடுப்பு அதிகமென்பதால் பெண்கள் பலரும் விரும்பி ஏற்கும் தொழிலாக இது உள்ளது.
ஆசிரியர்கள் ஏணிகள்.அவர்கள் மாணவர்களை மேலுயர்த்தி விடுபவர்கள்.சமூகம் என்ன விமர்சனத்தைச் சொன்னாலும் விசுவாசத்துடன்,பிள்ளைநேயத்துடன் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அந்தப் பிள்ளைகள் உயர்நிலையை எய்துவதே, சான்றோன் எனக் கேட்ட தாய் என்பதான பெருமை.
ஆனால் ஆசிரியர்கள் தனியே பிள்ளைகளின் உயர்வுடன் மட்டும் இருத்தலாகாது.நீரளவேயாகுமாம் நீராம்பல் என்ற ஒளவையின் வாக்கை நிலைநிறுத்தும் வகையில் தமது வாண்மைத் தேர்ச்சியினை உயர்த்திக் கொள்ள வேண்டும்.மருத்துவர்களோ, பொறியியலாளர்களோ, கணக்காளர்களோ தமது துறைசார்ந்த பருவஇதழ்களைத்(தழரசயெடள) தவறாது கற்றுத் தமது அறிவை இற்றைப்படுத்திக் கொள்வார்கள்.அது போல ஆசிரியர்கள் தம்மை இற்றைப் படுத்துவதில்லை.எவ்வளவோ கற்பித்தல் நுட்பங்கள் வந்துள்ள போதிலும் அவர்களால் வெண்கட்டியும் பேச்சும்(ஊhயடம யனெ வுயடம) என்ற உலகில் கைவிடப்பட்ட போதனா முறைமையை கைவிட முடியவில்லை.ஆசிரியர்களைப் பொறுத்தவரை தமது தொழில்சார் வாண்மையை உயர்த்தி இற்றைப்படுத்துவது போல பாடஞ்சார் அறிவையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. இது கஷ்டமானதெனினும் அவசியமானதும் கூட.
தனியார் கல்வி வியாபாரிகள் இங்கு படையெடுத்து வரும் சூழலில், அவர்கள் புதுப்புது வடிவங்களில் ஜிகினாப் பொருளாகக் கல்வியை விலைப்படுத்த முனைகையில் ஆசிரியர்கள் தமது கல்வியளிப்பினை உயர்நுட்பங்களைக் கையாண்டு வினைத்திறனுடன் மேற்கொள்ள வேண்டும்.இன்று ஆசிரியரது பணி கற்பிப்பதல்ல.கற்பதற்கு வழி காட்டுபவரே அவர். வழிகாட்டக் கூடிய தகைமை பெற்றிருப்பவர் வழிகாட்டக் கூடிய போதிய அறிவைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்.
ஆசிரியர்களை எடுப்பார் கைப் பிள்ளைகளாகக் கருதும் நிலையும் மாற்றப்பட வேண்டும். பாடசாலைகளில் யாரும் நுழையலாம்.தனியார் வியாபாரிகள் பயிற்சிப் பேப்பர்களுடன் வருவார்கள். ஆசிரியர்களை அவற்றைக் கொள்வனவு செய்து மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்புக்களை நடத்துமாறு அதிபர் பணிப்பார்.சுகாதாரப் பிரிவினர் வருவார்கள்.கற்பித்தலை இடைநிறுத்தி அவர்களது வேலைகளை நிறைவு செய்ய வேண்டும்.பிரதேச செயலகம்,பிரதேச சபை, கால்நடை அபிவிருத்தித் திணைக்களம், விவசாயத் திணைக்களம்,அரசுசாரா நிறுவனங்கள் எல்லாவற்றின் நிகழ்ச்சித் திட்டங்களும் அரங்கேறுமிடம் பாடசாலையே.அதற்குள் நனைந்து தோய்ந்து அல்லாடுபவர்கள் ஆசிரியர்களே.சனி,ஞாயிறு தினங்கள் என்றால் செமினார்,போட்டிகள் காத்திருக்கின்றன.மூச்சு விட வழியில்லை.இதற்குள் வாண்மை உயர்ச்சி என்றெல்லாம் யோசிக்கவே நேரமில்லை என்பதே ஆசிரியர்களது குரலாகும்.
ஆசிரியர்களைச் சமூகம் கொண்டாடும் போதே ஆசிரியர் தினம் உண்மையான அர்த்தத்தைப் பெறும்.அதை விடுத்து மாணவர்களிடம் காசு சேர்த்து ஆசிரியர் தினம் கொண்டாடுவது ஒரு தினத்தின் நினைவு கூரலாக மட்டுமேயிருக்கும்.மறுபுறத்தில் சமூகத்தில் தமது மதிப்பை உயர்த்திக் கொள்ள ஆசிரியர்களும் முன்வர வேண்டும்.வரப்புயர்ந்தால்தான் நீருயரும்.
விழிச்சான்குஞ்சு